அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் நேற்று (ஜனவரி 21) பதவியேற்றனர்.
கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் இரண்டாவது முறையாக அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதனையடுத்து அமெரிக்க தலைநகர் வாஷிங்டனில் இன்று அதிபர் பதவியேற்பு விழா நடைபெற்றது. இதனைக் காண பல்வேறு நாடுகளின் தலைவர்களும், தொழிலதிபர்களும், பிரபலங்களும் மற்றும் குடியரசு கட்சியை சேர்ந்தவர்களுக்கு கூடினர்.

பாரம்பரிய வழக்கப்படி, பதவியேற்புக்கு முன்பாக செயின்ட் ஜான்ஸ் தேவாலயத்தில் பிரார்த்தனை நடைபெற்றது. இதில் டிரம்புடன் அவரது மனைவி மெலானியா ஆகியோர் பங்கேற்றனர். அதனையடுத்து அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகைக்கு டிரம்ப், மெலானியா, துணை அதிபராக பதவியேற்கும் ஜே.டி.வான்ஸ், அவரது மனைவி இந்திய வம்சாவளியான உஷா வான்ஸ் ஆகியோர் சென்றனர். அவர்களை அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன், துணை அதிபர் கமலா ஹாரிஸ், அவரது கணவர் டக் எம்ஹாப் ஆகியோர் கட்டித்தழுவி வரவேற்றனர்.
தொடர்ந்து கேபிடல் எனப்படும் அமெரிக்க நாடாளுமன்றத்தில் பதவியேற்பு விழா தொடங்கியது. பொதுவாக, நாடாளுமன்ற கட்டிடத்தின் வெளி வளாகத்தில் அதிபர் பதவியேற்பு விழா நடத்தப்படும். ஆனால், கடும் குளிர் நிலவியதால் இம்முறை நாடாளுமன்ற உள்ளரங்கில் நடைபெற்றது.
முதலில் அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி பிரட் கவனாக் பதவி பிராமணம் செய்து வைக்க, தனது பாட்டி கொடுத்த பைபிளுடன் துணை அதிபராக ஜே.டி.வான்ஸ் பதவியேற்றார்.
தொடர்ந்து உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவி பிராமணம் செய்து வைக்க, தனது குடும்ப பைபிள் மற்றும் ஆபிரகாம் லிங்கனின் பைபிளை பயன்படுத்தி டிரம்ப் அமெரிக்க அதிபராக பதவியேற்றார்.

அதிபராக பதவியேற்ற டிரம்ப் தனது முதல் உரையில், “அமெரிக்காவின் பொற்காலம் இப்போதே தொடங்குகிறது. இந்த நாளிலிருந்து நமது நாடு மீண்டும் செழித்து உலகம் முழுவதும் மதிக்கப்படும்.
அமெரிக்காவை முதன்மைப்படுத்துவதே எனது நோக்கம். நாட்டின் இறையாண்மை, பாதுகாப்பு மீட்டெடுக்கப்படும். பெருமை, வளம் மற்றும் சுதந்திரம் கொண்ட ஒரு தேசத்தை உருவாக்குவதே எனது முதன்மையான முன்னுரிமை. அமெரிக்கா விரைவில் முன்பை விட பெரியதாகவும், வலிமையாகவும் இருக்கும். இது நம் நாட்டு வெற்றியின் ஒரு சிலிர்ப்பூட்டும் புதிய சகாப்தத்தின் தொடக்கம்.
முந்தைய ஆட்சி(பைடன்) நாட்டிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த “ஆபத்தான குற்றவாளிகளுக்கு” அடைக்கலம் மற்றும் பாதுகாப்பை வழங்கியது. வெளிநாட்டு எல்லைகளைப் பாதுகாப்பதற்கு வரம்பற்ற நிதியை அமெரிக்கா வழங்கியது. அதே நேரத்தில் அமெரிக்க எல்லைகளைப் பாதுகாக்க தவறியது. உள்நாட்டில் ஒரு எளிய நெருக்கடியைக் கூட அவர்களால் நிர்வகிக்க முடியவில்லை.
அமெரிக்காவின் தெற்கு எல்லையில் ஒரு தேசிய அவசரநிலையை அறிவிக்கிறேன். சட்டவிரோத நுழைவை நிறுத்தி, மில்லியன் கணக்கான வெளிநாட்டு கிரிமினல்களை நாடு கடத்தத் தொடங்குவேன். இது உறுதி” என டிரம்ப் தெரிவித்தார்.
அதன் பின்னர், பதவி விலகும் அதிபர் பைடன் மற்றும் துணை அதிபர் கமலா ஹாரிசை நாடாளுமன்றத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அனுப்பி வைக்கும் வழியனுப்பு விழாவுடன் பதவியேற்பு நிகழ்ச்சிகள் நிறைவடைந்தன.

டிரம்ப் பதவியேற்பு நிகழ்ச்சியில் அமெரிக்க முன்னாள் அதிபர்கள் பாரக் ஒபாமா, ஜார்ஜ் டபிள்யு புஷ், பில் கிளிண்டன் மற்றும் ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோரும், உலகின் முன்னணி தொழிலதிபர்களான டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், அமேசான் சிஇஓ ஜெப் பெசோஸ், கூகுள் சிஇஓ சுந்தர்பிச்சை, மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க், ஆப்பிள் தலைவர் டிம் குக் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இந்தியா சார்பில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், தொழிலதிபர் முகேஷ் அம்பானி மற்றும் அவரது மனைவி நீடா அம்பானி, அர்ஜென்டினா அதிபர் சேவியர் மிலே, இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி உள்ளிட்ட பல்வேறு உலக தலைவர்களும் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
கிறிஸ்டோபர் ஜெமா