போதைப்பொருள் கடத்தில் வழக்கில் கைதான ஜாபர் சாதிக் மீதான வழக்கு விசாரணை ஏப்ரல் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சூடோ பெட்ரின் என்ற போதைப்பொருட்களை கடத்தி விற்பனை செய்ததாக திமுக அயலக அணியின் முன்னாள் நிர்வாகியான ஜாபர் சாதிக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருடன் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
போதைப்பொருள் கடத்தல் மூலமாக ஜாபர் சாதிக் ரூ.2 ஆயிரம் கோடி வரை வருமானம் ஈட்டி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் சட்டவிரோதமாக சம்பாதித்த இந்த பணத்தை சினிமா மற்றும் ஓட்டல் தொழில்களில் முதலீடு செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக திரைப்பட இயக்குநர் அமீரிடம் டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து, திரைப்பட துறையில் ஜாபர் சாதிக்கிற்கு நெருக்கமாக இருந்த மேலும் பலரிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
இந்த வழக்கின் மீதான விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. ஜாபர் சாதிக்கை ஏற்கனவே போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் ஜாபர் சாதிக் மீதான போதைப்பொருள் வழக்கு இன்று (ஏப்ரல் 20) டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெறுவதாக இருந்தது.
ஆனால், இந்த வழக்கின் மீதான விசாரணை ஏப்ரல் 22ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றைய தினம் ஜாபர் சாதிக் உட்பட கைதான 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, ஜாபர் சாதிக் ஹவாலா பணப்பரிவர்த்தனையிலும் ஈடுபட்டு இருக்கலாம் என போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இதுகுறித்த தகவல்களை அவர்கள் சேகரித்து வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது சென்னை மண்ணடியில் உள்ள ஹவாலா பணப் பரிமாற்றம் செய்யும் தரகர் ஒருவர் மீது போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, அவரிடம் விசாரணையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சீண்டிய ராகுல் காந்தி… பினராயி விஜயன் பதிலடி : இந்தியா கூட்டணியில் சலசலப்பு!
அயோத்தி நடிகைக்கு அடுத்தடுத்து ‘குவியும்’ வாய்ப்புகள்..!