இன்னும் இரண்டே வாரங்களில் ஆதித்யா எல்1 விண்கலம் தனது இலக்கை அடையும் என இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் தெரிவித்துள்ளார்.
இதர விண்வெளி ஆய்வுகளின் வரிசையில் சூரியனையும் பல்வேறு நாடுகள் ஆராய்ந்து வருகின்றன. எனினும் பூமியிலிருந்து மேற்கொள்ளப்படும் அவற்றுக்கு மாற்றாக, விண்வெளியிலிருந்து சூரியனை ஆராயும் நடவடிக்கையை இஸ்ரோவின் ஆதித்யா வரிசை தொடங்கியது. நிலவை ஆராயும் சந்திரயான் வரிசையில், சூரியனை ஆராயும் ஆதித்யா வரிசை விண்கலன்கள் சகாப்தத்தை இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ ஆரம்பித்தது.
செப்டம்பர் 2 அன்று ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா எல்1 ஏவப்பட்டது. இது பூமியில் இருந்து சுமார் 1.5 மில்லியன் கிமீ தொலைவில் உள்ள லக்ராஞ்சியன் புள்ளியை ஜனவரி 6 அன்று எட்ட உள்ளது. இந்த லக்ராஞ்சியன் புள்ளியே சுருக்கமாக எல்.1 என்றழைக்கப்படுகிறது. அப்புள்ளியை அடைந்ததும் அங்கு எல்.1 தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும்.
அதன் பின்னர் அங்கிருந்தவாறு சூரியனை ஆராயத் தொடங்கும். ஆதித்யாவின் சூரியன் தொடர்பான தரவுகள் இந்தியா மட்டுமன்றி விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலக நாடுகள் பலவற்றுக்கும் பகிரப்பட இருக்கின்றன. இதன் மூலம் சூரியனை மையமாகக் கொண்டு பூமி சந்திக்கும் இடர்கள் முதல் பல துறைகளிலும் கிடைக்கும் பலன்கள் வரை அனைத்தையும் அறிந்துகொள்ள வாய்ப்பாகும்.
சூரியனின் கதிர்வீச்சு முதல் சூரியப்புயல் வரை எவ்வாறு தாக்கம் கொள்கிறது, அவற்றின் விளைவுகள் பூமியில் எவ்வாறு மாற்றங்களை ஏற்படுத்தும், தனி மனிதர் வாழ்வில் சூரியனின் ஆதிக்கம் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகள் இந்த வகையில் தொடர இருக்கின்றன. மேற்படி தகவல்களை இஸ்ரோ தலைவர் எஸ்.சோமநாத் தெரிவித்துள்ளார்.
ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!
சண்டே ஸ்பெஷல்: ரெடி டு குக் உணவுகள்… ஆபத்தை அறிந்துகொள்ளுங்கள்!