சூரியனை ஆய்வு செய்வதற்கு விண்ணில் பாய உள்ள ஆதித்யா எல் 1 மற்ற நாடுகளின் விண்கலத்தை விட தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது.
நிலவின் தென் துருவத்தில் சந்திரயான் 3 விண்கலத்தை தரையிறக்கி சாதனை படைத்தது இஸ்ரோ. இந்த சாதனையை நிகழ்த்திய ஒரு வாரத்திற்குப் பிறகு சூரியனை நோக்கிய பயணத்திற்கு தயாராகி விட்டது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல் 1 விண்கலம் இன்று காலை 11.50 மணிக்கு ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து விண்ணில் பாயவுள்ளது.
சூரியனை ஆய்வு செய்வதற்காக செல்லும் ஆதித்யா எல் 1 நிலவில் சந்திரயான் தரையிறங்கியது போல நேரடியாக சூரியனுக்கு செல்லாது.
இதன் இலக்கு பூமியிலிருந்து 15லட்சம் கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
இது பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான தூரத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு அதிகம். ஆதித்யா விண்கலம் ஏவியதில் இருந்து சுமார் 120 நாட்கள் பயணத்திற்குப் பிறகு பூமிக்கும் சூரியனுக்கு இடையே ஈர்ப்பு விசை சமநிலையில் உள்ள லாக்ரேஞ்ச் பாயிண்ட் 1-ல் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ ஏற்கனவே அறிவித்திருந்தது.
ஆதித்யா எல்1 மிஷன் டார்கெட்
ஆதித்யா எல் 1 ஃபோட்டோஸ்பியர் மற்றும் குரோமோஸ்பியர் என அறியப்படும் சூரியனின் வெளிப்புற அடுக்குகளை, மின்காந்த மற்றும் துகள் புலங்களைக் கண்டறியும் கருவிகளைப் பயன்படுத்திக் கண்காணிக்கும்.
இது சூரியச் செயல்பாடுகள் மற்றும் விண்வெளி வானிலையில் அதன் தாக்கத்தை கவனிக்க உதவும். சூரியக் காற்றின் இயக்கவியலைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள முயற்சிக்கும்.
வளிமண்டலத்தால் தடுத்து நிறுத்தப்படும் கதிர்வீச்சை பூமியில் இருந்து ஆய்வு செய்ய முடியாது என்பதால் அதனையும் ஆதித்யா எல்1 மேற்கொள்ள உள்ளது.
ஆதித்யா எல் 1 நிலைநிறுத்தப்பட்ட பிறகு அதன் நான்கு பேலோடுகள் சூரியனை நேரடியாகப் பார்க்கும். மீதமுள்ள மூன்று பேலோடுகள் லாக்ராஞ்ச் பாயிண்ட் L1-இல் உள்ள துகள்கள் மற்றும் புலங்களை அந்த இடத்திலேயே ஆய்வு செய்யும்.
இது கிரகங்களுக்கு இடையிலான விண்வெளியில் சூரிய இயக்கவியலின் விளைவு பற்றிய முக்கியமான தகவல்களை வழங்கும்.
சூரிய அம்சங்களைப் புரிந்துகொள்ள உதவும் முக்கியமான தகவல்களை இந்த விண்கலம் வழங்கும் என்று இஸ்ரோ கூறுகிறது.
பூமிக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரமான சூரியனைக் கண்காணிக்கவும் சூரியக் காற்று (solar wind) போன்ற விண்வெளி வானிலை அம்சங்களை ஆய்வு செய்யவும் இந்தியாவின் முதல் விண்வெளி ஆய்வகத்தை தொடங்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கம்.
சூரியன் ஆய்வு செய்யப்படுவது இது முதல் முறை அல்ல. நாசா மற்றும் ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் (ESA) ஏற்கனவே இந்த நோக்கத்திற்காக ஆர்பிட்டர்களை வைத்துள்ளது.
ஆனால் இந்தியாவின் திட்டம் சில தனித்துவமான அம்சங்களைக் கொண்டுள்ளது என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
மோனிஷா
அழகை ஆராதிப்பவரா நீங்கள்? – சத்குரு
வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!