சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 விண்கலம் தனது இலக்கான லக்ராஞ்சன் புள்ளியில் இன்று (ஜனவரி 6) வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
கடந்த செப்டம்பர் 2-ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து ஆதித்யா எல் 1 விண்கலம் ஏவப்பட்டது. 125 நாட்களுக்கு பிறகு, பூமியில் இருந்து 1.5 மில்லியன் கி.மீ தொலைவில் உள்ள லக்ராஞ்சன் புள்ளியை இன்று அடைந்தது. லக்ராஞ்சன் புள்ளி என்பது சுருக்கமாக எல் 1 என்று அழைக்கப்படுகிறது.
இந்த புள்ளியை ஆதித்யா எல் 1 அடைந்த உடன் செங்குத்தான சுற்றுவட்டபாதையில் நிலைநிறுத்தப்பட்டது. அடுத்த 5 ஆண்டுகளுக்கு சுற்றுவட்ட பாதையில் சுற்றியபடி சூரியன் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளது. சூரியன் தொடர்பான தரவுகள், இந்தியா மட்டுமின்றி விண்வெளி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் உலக நாடுகள் அனைத்திற்கும் பகிரப்பட உள்ளது.
ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில், “இந்தியா புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட ஆதித்யா எல் 1 இலக்கை அடைந்துள்ளது. மிகவும் சிக்கலான விண்வெளி ஆராய்ச்சியில் நமது விஞ்ஞானிகளின் இடைவிடாத உழைப்பால் இது சாத்தியமாகி உள்ளது. இந்த சாதனையை நாட்டு மக்களுடன் சேர்ந்து பாராட்டுகிறேன். மனித குலத்தின் நலனுக்காக அறிவியலின் புதிய எல்லைகள் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஒரே நாளில் மகளிர் உரிமை தொகை + பொங்கல் பரிசு!
நெல்லை – திருச்செந்தூர் ரயில் சோதனை ஓட்டம்: போக்குவரத்து சேவை எப்போது?