பிரதமர் மோடியிடம் திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் இன்று (மே 27) செங்கோல் வழங்கினார்.
நாளை திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மக்களவை தலைவர் இருக்கைக்கு அருகே செங்கோல் நிறுவப்பட உள்ளது.
இந்த செங்கோலானது 1947-ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது ஆட்சி மாற்றத்தை அடையாளப்படுத்தும் வகையில் திருவாவடுதுறை ஆதீனம் தம்பிரான் சுவாமிகள் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்கு வழங்கியதாகும்.

புதிய நாடாளுமன்ற கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் சென்னையிலிருந்து டெல்லிக்கு இன்று தனி விமானம் மூலம் சென்றார்.
மேலும் தமிழகத்தை சேர்ந்த 21 ஆதீனங்கள் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றனர்.

இந்தநிலையில் இன்று மாலை டெல்லியில் உள்ள பிரதமர் இல்லத்திற்கு ஆதீனங்கள் சென்றனர். பிரதமர் மோடி ஆதீனங்களிடம் ஆசி பெற்றுக்கொண்டார். இதனை தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் 24-வது ஸ்ரீலஸ்ரீ குருமகாசந்நிதானம் பிரதமர் மோடியிடம் செங்கோலை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
செல்வம்