அதானி விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சி தலைவர்கள் முழக்கங்களை எழுப்பியதால் இரண்டு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அதானி குழும விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி-க்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்தநிலையில், இன்று காலை 9.30 மணியளவில் நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 16 எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலையின் முன்பாக காங்கிரஸ், திமுக, கம்யூனிஸ்ட், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட 16 கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாடாளுமன்றத்தின் அவை நடவடிக்கைகள் துவங்கியதும் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதானி குழும மோசடிகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று தொடர் முழக்கங்கள் எழுப்பினர்.

மாநிலங்களவையில் காங்கிரஸ் எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசுகையில், “அதானி குழும பங்கு சந்தை முதலீடு குறித்து நாங்கள் கொண்டு வந்த நோட்டீஸ் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவான விசாரணை நடத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும்.” என்றார்.
எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
செல்வம்