கேரள மீனவர்களின் கடும் போராட்டங்களால் கௌதம் அதானியின் விழிஞ்சம் துறைமுகத் திட்டம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உலகின் 3வது பெரிய பணக்காரரான கெளதம் அதானி, இந்தியாவின் தென் முனையில் உள்ள கேரளாவின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் பகுதியில் பெரிய அளவில் துறைமுகத்தினை கட்டி வருகிறார். எனினும் விழிஞ்சம் பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 2015-ஆம் ஆண்டு அப்போதைய முதல்வரான காங்கிரஸ் கட்சியை சேர்ந்த உம்மன் சாண்டியின் தலைமையிலான அரசு, விழிஞ்சம் பகுதியில் சுமார் ரூ.7,525 கோடி மதிப்பீட்டில் சர்வதேச துறைமுகத்தை அமைக்கும் பணியை அரசு மற்றும் தனியார் கூட்டமைப்பு (PPP) என்ற அடிப்படையில் அதானி நிறுவனத்திற்கு வழங்கியது.
இந்த துறைமுக திட்டத்தின் மொத்த மதிப்பீட்டுத் தொகையான ரூ.7,525 கோடியில் அதானி நிறுவனமானது வெறும் ரூ.2,454 கோடி மட்டுமே முதலீடு செய்யும். மீதமுள்ள தொகையானது மத்திய மற்றும் மாநில அரசுகளின் பங்களிப்பாக இருக்கும் என்றும் ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டது.
மேலும் இந்த துறைமுகத்தின் கட்டுமான பணிகள் தொடங்கியதிலிருந்தே மீனவர்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். குறிப்பாக துறைமுக கட்டுமானப் பணிகளால் கடந்த ஆண்டு கடல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் சொந்த நிலத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அது மட்டுமில்லாமல் 56,000 மீனவ சமூகத்தினரின் மீன்பிடி தொழிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் தான் அங்குள்ள மீனவர்கள், மத்திய பாஜக அரசு, கேரள அரசு மற்றும் அதானி துறைமுக கட்டுமான பணிகளுக்கு எதிராக போர்க்கொடி ஏந்தியுள்ளனர்.
எந்த எல்லைக்கும் செல்ல தயார்!
இந்நிலையில், போராட்டங்களினால் துறைமுக பணி பாதிக்கப்பட கூடாது என்றும், துறைமுகத்திற்கு செல்லும் வாகனப் போக்குவரத்தைத் தடுக்கக் கூடாது என்றும் மீனவர்களின் போராட்டத்திற்கு எதிராக கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எனினும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி விழிஞ்சம் பகுதியில் உள்ள பெரும்பான்மையான கிறிஸ்துவ மீனவ மக்கள் அங்குள்ள பாதிரியார்களின் ஆதரவுடன் துறைமுகத்திற்கு வாகனங்கள் செல்லும் வழியில் கூடாரம் அமைத்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மீனவர் ஒருவர், “எங்கள் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க எந்த எல்லைக்கும் செல்ல நாங்கள் தயாராக இருக்கிறோம். இது செய் அல்லது செத்து மடி பிரச்சினை தான்” என்று தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் துறைமுகத்திற்கு ஆதரவாக பாஜக மற்றும் இந்து குழுக்களின் உறுப்பினர்கள் கூடாரம் அமைத்து கோஷம் எழுப்பி வருகின்றனர்.
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்!
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், அவர்கள் மீது காவல்துறை பெரிய அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை. அவ்வாறு நடவடிக்கை எடுத்தால் தேவையற்ற மத கலவரங்களுக்கு வழி வகுத்துவிடும் என்று போலீசார் கவலை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து துறைமுகத்திற்கு வெளியே பாதுகாப்புப் பொறுப்பில் உள்ள மூத்த போலீஸ் அதிகாரி பிரகாஷ் கூறுகையில், “அண்டை மாநிலமான தமிழ்நாட்டில் நடந்தேறிய தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற சூழ்நிலையைத் தவிர்ப்பதே எங்களது நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “எந்தவொரு விரும்பத்தகாத சம்பவங்களும் ஏற்படாமல் இருக்க, நாங்கள் ஆயுதத்தை பயன்படுத்த தவிர்க்கிறோம். பதட்டத்தில் யாராவது தற்கொலை செய்து கொண்டால் பதற்றம் ஏற்பட்டுவிடும்.
துறைமுகத்துக்கு எதிரான போராட்டம் மதக்கலவரமாக மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை நாங்கள் நிராகரிக்க முடியாது.” என்று தெரிவித்துள்ளார்.
திங்கட்கிழமை வழக்கு விசாரணை!
2024 டிசம்பருக்குள் முதல் கட்ட கட்டுமானப் பணிகளை முடிக்க அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது. எனினும் நீதிமன்ற உத்தரவையும் மீறி அங்கு நடைபெற்று வரும் மீனவ மக்களின் போராட்டம் அதானியின் கனவு திட்டத்திற்கு முட்டுக்கட்டையாக உள்ளது.
போராட்டக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்காத கேரள அரசுக்கு எதிராக அதானி தொடுத்துள்ள மனு மீதான அடுத்த விசாரணை வரும் 28ம் தேதி நடைபெறவுள்ளது.
ஏற்கெனவே ஆஸ்திரேலியாவில் நிலக்கரி சுரங்க வேலைகளில் ஈடுபட்டுள்ள அதானிக்கு உள்ளூர் சமூக நல ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா
”சந்திரபாபு ஒரு அரசியல் கொள்ளைக்காரர்” : ஜெகன் மோகன் சாடல்!
எடப்பாடி ஆளுநர் சந்திப்பு : தங்கம் கிளப்பும் டவுட்!