ஹிண்டன்பெர்க் அறிக்கை எதிரொலியாக நேற்று டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி இன்று 15வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இதன்மூலம் ஆசியா மற்றும் இந்திய அளவில் நீண்ட நாட்களாக பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை தக்கவைத்திருந்த அதானி அதனை தற்போது அம்பானியிடம் இழந்துள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த ஹிண்டன்பெர்க் ஆய்வு நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக ஒரு அதிர்ச்சி ஆய்வறிக்கையை வெளியிட்டது.
அதில் அதானி குழுமம் பல ஆண்டுகளாக பங்குச்சந்தை முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக கூறியது.
இதனைத் தொடர்ந்து பங்குச் சந்தைகளில் அதானி குழுமத்தின் பங்கு மதிப்பு கடந்த 5 வர்த்தக நாட்களில் வெகுவாக சரிந்துள்ளது.
இது கெளதம் அதானியின் தனிப்பட்ட சொத்து மதிப்பிலும் எதிரொலித்த நிலையில் ப்ளூம்பெர்க் வெளியிட்ட உலக பணக்காரர்கள் வரிசையிலும் தொடர்ந்து பின் தங்கி வருகிறார்.
அதிகபட்சமாக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸை முந்தி, 147 பில்லியன் டாலர் நிகர மதிப்புடன் உலகளவில் இரண்டாவது பணக்காரர் என்ற பெருமையை அதானி பெற்றார்.
இதன்மூலம் ஆசியா மற்றும் இந்திய அளவில் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார்.
இந்நிலையில் ஹிண்டன்பெர்க் ஆய்வறிக்கை எதிரொலியாக, இரண்டு வருடங்களுக்கு பிறகு முதன்முறையாக நேற்று டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறி 11வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.
எனினும் அதானி குழுமத்தின் பங்குகள் தொடர்ந்து சரிவடைந்து வரும் நிலையில் மேலும் இன்று பின் தங்கி 15வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
அதேவேளையில் 9வது இடத்துக்கு முன்னேறியுள்ள இந்திய தொழிலதிபர் முகேஷ் அம்பானி டாப் 10 உலக பணக்காரர்கள் பட்டியலில் மீண்டும் நுழைந்துள்ளார்.
இதன்மூலம் இந்தியாவின் பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தை மீண்டும் முகேஷ் அம்பானியிடம் இழந்துள்ளார் அதானி.
கிறிஸ்டோபர் ஜெமா
காத்திருந்து காத்திருந்து… பாஜக இல்லாத புதிய கூட்டணி அமைத்த எடப்பாடி