அதானி விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் மீண்டும் மாநிலங்களவையில் கடும் அமளியில் ஈடுபட்டன.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்ட தொடர் நடைபெற்று வரும் நிலையில் கடந்த 2 வாரங்களாக அதானி விவகாரம் தொடர்பாக மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடும் அமளி ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அதானி குழுமத்திற்கு எதிரான குற்றச்சாட்டுகள் குறித்து பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வலியுறுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பினர்.
பொதுத்துறை நிறுவனங்களிலிருந்து அதானிக்கு அதிக கடன் வழங்கப்பட்டதாகவும், அதனால்தான் அதானி குழுமத்தின் வர்த்தகம் முன்னேற்றம் கண்டிருப்பதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின.
இந்தநிலையில் இரண்டு நாள் விடுமுறைக்குப் பிறகு இன்று காலை 11 மணிக்கு மீண்டும் மக்களவை மற்றும் மாநிலங்களவை கூடியதும் மாநிலங்களவையில் அதானி விவகாரத்தை மீண்டும் எதிர்க்கட்சிகள் கையில் எடுத்தன.
அவையின் மையத்திற்கு வந்து அதானி! அதானி!! என எதிர்கட்சிகள் கோஷம் எழுப்பி அமளியில் ஈடுபட்டன.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எதிராக பாரதிய ஜனதா கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்கள் மோடி! மோடி!! என பதில் கோஷம் எழுப்பினர்.
இதனால் மாநிலங்களவையில் சில நிமிடங்கள் கடும் அமளி ஏற்பட்டது.
கலை.ரா
மகளிர் ஐபிஎல் ஏலம்: எதிர்பார்ப்பில் வீராங்கனைகள்!
சர்வதேச விமான கண்காட்சி: சாகசங்களை கண்டு ரசித்த பிரதமர்!