அதானி விவகாரம் : மக்களவையில் காங்கிரஸ் நோட்டீஸ்!

அரசியல் இந்தியா

அதானி விவகாரம் குறித்து மக்களவையில் விவாதிக்க காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் உள்ளிட்டோர் ஒத்திவைப்பு நோட்டீஸ் வழங்கியுள்ளனர்.

2024 ஆம் ஆண்டுக்கான நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் 25ஆம் தேதி(இன்று) தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற 16 மசோதாக்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

கடந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டு நிலுவையில் உள்ள வக்ஃபு வாரிய திருத்த மசோதாவை இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்ற பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இன்று இந்த மசோதாவோடு, வணிக கப்பல் மசோதா, கடலோர கப்பல் மசோதா, இந்திய துறைமுக மசோதா, பஞ்சாப் நீதிமன்றங்கள் திருத்த மசோதா ஆகியவற்றையும் நிறைவேற்ற பட்டியலிடப்பட்டுள்ளன.

நாடாளுமன்றம் கூடுவதை முன்னிட்டு நேற்று டெல்லியில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் திமுக சார்பில் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு மற்றும் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஆர்.பாலு , “மத்திய அரசுக்கு கிடைக்கும் மேல் வரி மற்றும் செஸ் வரிகளை மாநில அரசுகளுக்கு பிரித்தளிப்பது கிடையாது. இது குறித்து நாடாளுமன்றத்தில் பேசவுள்ளோம்.

தமிழகத்தில் கிடப்பில் உள்ள ரயில்வே திட்டங்கள் குறித்தும், வக்ஃபு வாரிய திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெற வேண்டும் என்றும் குரல் எழுப்பவுள்ளோம்” என்று கூறினார்.

மணிப்பூர் விவகாரம், ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற நிலைப்பாடு இருக்கக்கூடாது ஆகியவை தொடர்பாக குரல் எழுப்புவோம் என்று தெரிவித்த எம்.பி டி.ஆர்.பாலு, “அதானி விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அந்த பிரச்சினையை ஒரே கருத்தாக எழுப்புவோம்” என்று கூறியிருந்தார்.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ, செய்தியாளர்களிடம் கூறுகையில், “குளிர்கால கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெறுவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

இந்த நிலையில் இன்று(நவம்பர் 25) குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கவிருக்கும் நிலையில், காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அதானி விவகாரம் குறித்து விவாதிக்க மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் அளித்துள்ளார்.

“அதானி விவகாரத்தில் மோடி அரசின் மௌனம் இந்தியாவின் ஒருமைப்பாடு, பொருளாதாரம் மற்றும் உலகளாவிய நற்பெயரை குறைத்து மதிப்பிடுவதற்கு உட்படுத்துகிறது.

அதானி உடனான நட்பு மற்றும் அவர் மீது சுமத்தப்பட்ட லஞ்ச குற்றச்சாட்டு குறித்து பிரதமர் மோடி பதிலளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி.க்கள் மணிஷ் திவாரி, கே.சி வேணுகோபால் ஆகியோரும் ஒத்திவைப்பு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.

“அதானி குடும்பத்தின் முறைகேடுகள் மற்றும் இது குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரிப்பது தொடர்பாக விவாதிக்க வேண்டும்” என்று கே.சி வேணுகோபால் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, இந்தியாவில் சூரிய மின்சக்தி திட்டத்தில் ஒப்பந்தங்களை பெற அதிகாரிகளுக்கு 2,200 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக அதானி குடும்ப தலைவர் கெளதம் அதானி மற்றும் அவரது மருமகன் மீது நியூயார்க் நீதிமன்றம் குற்றம்சாட்டி பிடிவாரன்ட் பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்.

பிரியா

டெல்டா மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்?: வெதர்மேன் பிரதீப் ஜான்

வேலைவாய்ப்பு : எஸ்.பி.ஐ வங்கியில் பணி!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0