”எங்களுக்கே தெரியாம வாங்கிட்டாங்க” NDTV-ஐ அதானி கைப்பற்றிய கதை!
இந்தியாவில் மிகப் பிரபலமாக அறியப்படும் என்.டி.டி.வி. செய்தி தொலைக்காட்சியின் பங்குகளை அதானி வாங்கி இருப்பது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
14 வருடங்களுக்கு முன்பே இதற்கான விதை போடப்பட்டிருந்தாலும் சேனல் நிறுவனருக்கு கூட தெரியாமல் திடீரென அதானி என்.டி.டி.வி.யை வாங்கி இருப்பது தான் அதைவிட அதிர்ச்சி அளிக்க கூடிய செய்தி.
அதானி என்.டி.டி.வியை வாங்கியது எப்படி?
கடந்த 22ம் தேதி அதானியின் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க் லிமிடெட் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.
அதில் விஷ்வபிரதான் கமெர்ஷியல் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தை ரூ.113.74 கோடிக்கு வாங்கிவிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிறுவனம் தான் என்.டி.டி.வி.யின் 29.18 சதவீத பங்குகளை வைத்திருந்தது. இந்த நிறுவனத்தை இப்போது அதானி வாங்கியதை அடுத்து என்.டி.டி.வி.யின் பங்குகளும் அதானியின் கைகளுக்கு சென்றுள்ளது.
விபிசி பிரைவேட் நிறுவனம் வைத்திருந்த 29 சதவீத பங்குகள்!
என்.டி.டி.வி.யின் நிறுவனர்கள் ராதிகா ராய், பிரனாய் ராய் கைவசம் அந்த சேனலின் 61.45 சதவீத பங்குகள் இருந்தது.
இதில் 29 சதவீத பங்குகள் ராதிகா ராய், பிரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் (RRPR) நிறுவனம் வைத்திருந்தது. இந்நிலையில் 2009ம் ஆண்டு விஷ்வ பிரதான் கமெர்ஷியல் பிரைவேட் நிறுவனத்திடம், RRPR நிறுவனம் ரூ.403 கோடி கடன் வாங்கியது.
அப்போதே கடனை திருப்பி கொடுக்கவில்லை என்றால் ராதிகா ராய், பிரனாய் ராய் பிரைவேட் லிமிடெட் கைவசம் இருக்கும் 29 சதவீத பங்குகள் விஷ்வபிரதான் நிறுவனத்தின் கைகளுக்கு மாறிவிடும் என்ற ரீதியில் ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது.
அதன்படி தற்போதுவரை ஆர்ஆர்பிஆர் நிறுவனம் கடனை திருப்பி செலுத்தாத நிலையில் தான் என்.டி.டி.வி.யின் பங்குகள் தற்போது கை நழுவி சென்றுள்ளது.
கடன் கொடுத்த அம்பானி!
ஒரு கன்சல்டன்ஸி நிறுவனமாக இருந்த விஷ்வபிரதான் நிறுவனம் அப்போது தன்னிடம் சொந்தமாக சொத்து எதுவும் இல்லை என்று கூறியுள்ளது.
ஆனால் இந்த நிறுவனத்துக்கு என்.டி.டி.வி.க்கு கடன் கொடுக்கும் அளவுக்கு ரூ.400 கோடி பணம் எங்கே இருந்து வந்தது?. இதற்கு பின்னால் இந்தியாவின் மற்றொரு பெரும் பணக்காரரான அம்பானியின் பங்கு இருந்ததும் தெரியவருகிறது.
விஷ்வரபிரதான் நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய தொகையை கடனாக கொடுத்தது அதன் சகோதர நிறுவனமான ஷினானோ பிரைவேட் லிமிடெட் நிறுவனம் தான்.
இந்த நிறுவனம் அந்த பணத்தை அம்பானிக்கு சொந்தமான ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரியல் இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்திடம் இருந்து வாங்கி கொடுத்துள்ளது.
இப்படி அந்த பணம் பல நிறுவனங்களிடம் இருந்து கைமாறி தான் என்.டி.டி.வி. நிறுவனர்களின் கைகளுக்கு வந்து சேர்ந்துள்ளது.
இது மட்டுமின்றி, விஷ்வபிரதான் நிறுவனத்தின் இயக்குநர்கள் அம்பானியின் ரிலையன்ஸ் இந்தியா இன்வெஸ்ட்மெண்ட் நிறுவனத்தில் உயர் பொறுப்புகளில் இருந்ததும் அம்பானியின் உதவி கிடைப்பதற்கு காரணமாக இருந்துள்ளது.
அம்பானிக்கு டிவிஸ்ட் வைத்த அதானி
2012ம் ஆண்டு விஷ்வபிரதான் நிறுவனத்தின் ஓனர்ஷிப், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோ காம் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநராக இருந்த மஹேந்திர நஹடா கைக்கு மாறியது.
அதன்படி விஷ்வபிரதான் நிறுவனத்தை அம்பானிக்கு நெருக்கமான மஹேந்திர நஹடாவோட நெக்ஸ்ட்வேவ் டெலிவென்சர் நிறுவனம் தான் வைத்திருந்தது. ஆனால், இந்த நிறுவனத்தை அம்பானி வாங்குவதற்கு பதிலாக அதானி வாங்கியது தான் தற்போது நடந்த மிகப்பெரிய ட்விஸ்டு.
RRPR வசம் 29 சதவீத பங்குகள் இருந்ததால் அந்த நிறுவனம் தான் என்.டி.டி.வி சேனலின் மிகப்பெரும் பங்கு முதலீட்டாளராக இருந்தார்கள். இது தவிர,ராதிகா ராயிடம் 16.32 சதவீத பங்குகளும், பிரனாய் ராயிடம் 15.94 சதவீத பங்குகளும் மட்டும் தான் இருந்தது.
ஆனால் இப்போது விஷ்வ பிரதான் நிறுவனம் வைத்திருந்த என்.டி.டி.வி.யின் 29 சதவீத பங்குகள் அதானியின் கைகளுக்கு சென்றுள்ளது. இதனால் அதானி தான் என்.டி.டி.வியின் மிகப்பெரிய ஷேர் ஹோல்டர்.
இதன்மூலம் என்.டி.டி.வி. நிர்வாக முடிவுகளை அதானிக்கு தெரியாமல் எடுக்க முடியாது என்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் கூடுதலாக 26 சதவீத பங்குகள் வாங்கவும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார் அதானி.
ஓனருக்கே தெரியாமல் வாங்கப்பட்ட என்.டி.டி.வி பங்குகள்!
2014ம் வருடம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் வென்று மோடி பிரதமரான பிறகு ஊடகங்களை பா.ஜ.க. தன்னுடைய கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிட்டதாக விமர்சனங்கள் எழுந்தது.
ஆனால் என்.டி.டி.வி. உள்ளிட்ட ஒரு சில செய்தி நிறுவனங்கள் மட்டுமே தைரியமாக மோடி அரசுடைய தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சித்து வருவதாக கருதப்பட்டு வந்தன.
இந்த நிலைமையில் மோடியின் நண்பராக அறியப்படும் அதானி, என்.டி.டி.வி. நிறுவனத்தின் பங்குகளை வாங்கி உள்ளதால், இனியும் அந்த செய்தி நிறுவனம் மோடி அரசை விமர்சிக்கும் செய்திகளை வெளியிடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையே, என்.டி.டி.வி. பங்குகளை வைத்திருக்க கூடிய விஷ்வபிரதான் நிறுவனம் இது பற்றி தங்களிடம் எதுவும் கூறப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக என்.டி.டி.வி. நிறுவனர்களான ராதிகா ராய், பிரனாய் ராய் இருவரும், எங்களிடம் ஒருவார்த்தை கூட ஆலோசிக்காமல் என்.டி.டி.வி. பங்குகள் அதானிக்கு விற்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி உள்ளனர்.
மேலும் அதானி பங்குகள் வாங்கியுள்ளதால், என்.டி.டி.வி.யின் பத்திரிகை தர்மம் மாறிவிடாமல் தொடர்ந்து செயல்படுவோம் என்று உறுதி பட தெரிவித்துள்ளார்கள் என்.டி.டி.வி. நிறுவனர்கள்.
அப்துல் ராபிக், கிறிஸ்டோபர் ஜெமா
அதானி வாங்கிவிட்டாரா? ஒருபோதும் சமரசம் கிடையாது: என்.டி.டி.வி விளக்கம்!