உலகில் இதுவரை இல்லாத அளவில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிகபட்ச வாக்காளர்கள் வாக்களித்ததாகக் கூறி தேர்தல் ஆணையர், வாக்காளர்களுக்காக எழுந்து நின்று கைதட்டி பாராட்டு தெரிவித்தார்.
நாட்டில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் 1ஆம் தேதி வரை மொத்தம் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக நாளை பலத்த எதிர்பார்ப்பிற்கிடையே வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இந்த நிலையில் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் டெல்லியில் இன்று (ஜூன் 3) மதியம் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர், நடந்து முடிந்த 18வது மக்களவை தேர்தலில் 64.2 கோடி வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர் என்று கூறி, அவர்களுக்காக நன்றி தெரிவித்து எழுந்து நின்று கைதட்டினார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், “18-வது மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவை சிறப்பாக நடத்தி முடித்துள்ளோம். முக்கியமாக 85 வயதுக்கு மேற்பட்டோரும், மாற்றுத்திறனாளிகளும் அதிக எண்ணிக்கையில் வாக்களித்துள்ளனர். பெண்கள், இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வாக்களித்து வெற்றிகரமாக மாற்றி உள்ளனர். 27 ஐரோப்பிய நாடுகளில் உள்ள வாக்களர்களை ஒப்பிடும் போது 2.5 மடங்கு அதிகமாகும்.
தேர்தல் ஆணையத்தைக் காணவில்லை என பகிரப்பட்ட மீம்ஸ்களை நாங்கள் பார்த்தோம். தேர்தல் காலங்களில் நாங்கள் எங்கேயும் செல்லவில்லை; மக்களுக்கு தேவையானவற்றை செய்திக்குறிப்புகளின் மூலம் வெளியிட்டோம். தேர்தல் தொடர்பாக சுமார் 100 சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளோம்.
நக்சல் பாதிப்புகள் இருக்கக்கூடிய பகுதிகளான மணிப்பூர், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக வன்முறை இல்லாமல் வாக்குப்பதிவு நடைபெற்றது.
பணப்பட்டுவாடா, இலவச பொருட்கள் வழங்குவது உள்ளிட்டவை பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டது. இதுவரை ரூ.4,391 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் பயிற்சியில் 68,000 கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் 1.5 கோடி பேர் தேர்தல் பாதுகாப்பு அதிகாரிகளாக பணியாற்றினர். தேர்தல் பணிகளுக்கு 4 லட்சம் வாகனங்கள், 135 சிறப்பு ரயில்கள் மற்றும் 1,692 விமானப் போக்குவரத்து பயன்படுத்தப்பட்டன.
2019 மக்களைத் தேர்தலில் 540 இடங்களில் மறுவாக்குப்பதிவு நடந்தது. ஆனால் இந்த முறை 39 இடங்களில் மட்டுமே மறுவாக்குப்பதிவு நடந்துள்ளது. 27 மாநிலங்களில் மறு வாக்குப்பதிவு என்பதே இல்லை. இது மிகப்பெரிய சாதனை.
நாளை நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கைக்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை இடைவிடாது சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்படும்.
இந்த மக்களவைத் தேர்தலில் மறு வாக்குப்பதிவுகள், வன்முறை, வாக்குக்கு பணம் கொடுக்கும் சம்பவங்கள், AI மூலமாக போலி செய்தி பரப்புதல் போன்றவை குறைந்துள்ளன.
வாக்காளர்களின் எண்ணிக்கை, அனைத்து தரப்பினரும் பங்கெடுத்தது, தொழில்நுட்ப பயன்பாடு, பறிமுதல்கள் போன்றவை அதிகரித்துள்ளன.
பல கட்சிகளில் பிரதிநிதிகள் எழுப்பிய அனைத்து விவகாரங்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் கடந்த 4 தசாப்தங்களில் இல்லாத அளவு வாக்குகள் பதிவாகியுள்ளது. விரைவில் ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலுக்கான பணிகளை தொடங்க உள்ளோம்” என்று தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
மோடி, ராதிகாவுக்காக வேண்டுதல்… : சரத்குமார் அங்கப்பிரதட்சணம்!