உயிர் காக்கும் திட்டம்: சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவருக்கு இலவச சிகிச்சை!

Published On:

| By christopher

சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ரூ.1.50 லட்சம் வரை இலவசமாக சிகிச்சை பெறும் பணமில்லா சிகிச்சை திட்டத்தை மத்திய அரசு இறுதி செய்துள்ளது.

பணமில்லா சிகிச்சை திட்டமாக, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் நாடு முழுவதும் உள்ள பட்டியலிடப்பட்ட மருத்துவமனைகளில் சாலை விபத்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் இலவச மருத்துவ சிகிச்சையை பெறலாம். இந்தத் திட்டத்தின்கீழ் சிகிச்சையின் உச்ச வரம்பு ரூ 1.5 லட்சமாக இருக்கும்.

இது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 10 நாள்கள் வரை பொருந்தும். சிகிச்சையின் செலவு காப்பீடு மூலம் ஈடு செய்யப்படும்.

சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் முதல் 60 நிமிடங்களுக்குள் சரியான நேரத்தில் மருத்துவ உதவியை உறுதி செய்வதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இது ‘பொன்னான நேரம்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இந்த முக்கியமான நேரத்துக்குள் உடனடி மருத்துவ சேவையை வழங்குவதன் மூலம் சுமார் 50 சதவிகித விபத்து உயிரிழப்புகளைத் தடுக்க முடியும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன. 2022-ம் ஆண்டில், இந்தியாவில் 1.68 லட்சம் சாலை விபத்துகள் பதிவாகியுள்ளன.

இந்த திட்டத்துக்கான முன்மொழிவு, அமைச்சகங்களுக்கு இடையேயான ஆலோசனைக்கு உட்படுத்தப்பட்டு, திருத்தப்பட்ட மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 2019ல் சேர்க்கப்பட்டது. அரசுக்கு எந்த நிதிச் சுமையும் இல்லாமல், இந்தத் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், “இதற்கான செலவுகளை காப்பீட்டு நிறுவனங்கள் ஈடுகட்டும். இது அவர்கள் வசூலிக்கும் மூன்றாம் நபர் காப்பீட்டு பிரீமியங்களில் ஒரு பகுதியிலிருந்து செலவிடப்படும்.

உடனடி மருத்துவ உதவி மூலம் இறப்புகளை குறைப்பதன் மூலம், காப்பீட்டு நிறுவனங்களும், இறப்புக்கான இழப்பீட்டு தொகை வழங்குவதிலிருந்து பயனடையும்.

அரசு மேற்கொண்டுள்ள மதிப்பீடுகளின்படி, சுமார் 97 சதவிகித சாலை விபத்துகளின் சராசரி மருத்துவ செலவு சுமார் ரூ.60,000 ஆகும்.

பாதிக்கப்பட்டவர்களில் ஒரு சிறிய எண்ணிக்கையிலானவர்களுக்கு மட்டுமே மருத்துவமனையில் அதிக நாட்கள் சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

இதை உறுதிப்படுத்தும்விதமாக, சர்வதேச சாலை சம்மேளனம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், மத்திய போக்குவரத்து துறை செயலாளர் அனுராக் ஜெயின் பேசுகையில்,

“பணமில்லா சிகிச்சை திட்டம் இறுதி கட்டத்தில் உள்ளது. இத்திட்டம், சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் மூலம் விரைவில் செயல்படுத்தப்படும்” என்று கூறியுள்ளார்.

ராஜ்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கிச்சன் கீர்த்தனா: தலைக்கறி பாஸ்தா

கேலோ இந்தியாவை தொடர்ந்து அடுத்த டார்கெட் இதுதான் : மேடையில் உடைத்த உதயநிதி

சிம்பு பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்க தயாராகும் கமல்

இனி Paytm-ல் பண பரிமாற்றம் கிடையாது : ரிசர்வ் வங்கி அதிரடி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel