ரயிலில் ஏசி பெட்டிகளுக்கான பயண கட்டணத்தை 25 சதவீதம் குறைத்து ரயில்வே வாரியம் இன்று (ஜூலை 8) அறிவித்துள்ளது.
ஏசி இருக்கை வசதி, எக்சிகியூட்டிவ் வகுப்புகள் கொண்ட ரயில்களில், பயணிகளின் பயன்பாட்டை அதிகரிக்கும் வகையில் வந்தே பாரத் உள்ளிட்ட சில ரயில்களில் அடிப்படை கட்டணத்தில் 25 சதவீதம் சலுகையை ரயில்வே வாரியம் அறிவித்துள்ளது.
கடந்த 30 நாட்களில் 50 சதவீதத்திற்கும் குறைவான பயணிகளைக் கொண்ட ரயில்களில் இந்த கட்டண சலுகை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. ரயில்களில் கட்டண சலுகைகளை அறிமுகப்படுத்த ரயில்வே மண்டலங்களின் முதன்மை தலைமை வணிக மேலாளர்களுக்கு அதிகாரங்களை வழங்கவும் ரயில்வே வாரியம் முடிவு செய்துள்ளது.
இந்த 25 சதவீத கட்டண சலுகையானது அடிப்படை கட்டணத்தில் மட்டுமே தவிர முன்பதிவு மற்றும் ஜிஎஸ்டியில் கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கட்டணச் சலுகை அறிமுகப்படுத்தப்பட்ட பிறகும், நடைமுறைகளுக்கு ஏற்ப சலுகையை மாற்றியமைத்துக் கொள்ளலாம், எந்த மாற்றமும் உடனுக்குடன் செயல்படுத்தப்படும். அதே வேளையில், முன்பதிவு செய்தவர்களுக்கு இந்தச் சலுகைப் பொருந்தாது, பணம் திரும்ப வழங்கப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகளின் பயன்பாடு அதிகரித்த பிறகு, சலுகைக் கட்டணத்தை நிறுத்தியும் வைக்கலாம் என்றும் இந்திய ரயில்வே மண்டலங்களுக்குத் தெரிவித்துள்ளது.
மோனிஷா
ஜம்முவில் அடித்து செல்லப்பட்ட தேசிய நெடுஞ்சாலை: துண்டிக்கப்பட்ட ஸ்ரீநகர்!