டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்கவுள்ளது. 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி தோல்வியடைந்துள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலை டெல்லி மக்கள் பெரிதாக நம்பினர். படித்தவர், ஊழல் செய்யாதவர், மக்கள் நலனில் அக்கறை காட்டுவார் என நம்பி டெல்லி முதல்வராக தேர்ந்தெடுத்தனர். ஆனால், அரவிந்த் கெஜ்ரிவாலும் ஊழலில் திளைப்பதாக மக்கள் நம்ப தொடங்கியதுதான் ஆம் ஆத்மி கட்சியின் தோல்விக்கு வித்திட்டு விட்டது.
ஆம் ஆத்மி கட்சியாவது டெல்லியில் 10 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது. இதனால், இயல்பாகவே மக்கள் மாற்று கட்சிக்கு வாக்களிக்க விரும்பியிருக்கலாம். அப்படி, மாற்று கட்சிக்கு வாக்களிக்க விரும்பினாலும் காங்கிரஸ் கட்சியை டெல்லி மக்கள் ஒரு பொருட்டாகவே மதிக்காதது ஏன் என்று தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியால் டெல்லியில் ஒரு தொகுதியை கூட கைப்பற்ற முடியவில்லை.
இதற்கிடையே, டெல்லியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சியை பிடித்ததும் காங்கிரஸ் கட்சி தலைவரான பிரியங்கா காந்தி ஒரு வித்தியாசமான கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது, ஆம் ஆத்மி கட்சியால் டெல்லி மக்கள் சோர்வடைந்து விட்டனர். அதனால், மாற்றம் வேண்டுமென்று வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மாற்றம் வேண்டுமென்று டெல்லி மக்கள் பாரதிய ஜனதாவுக்கு ஓட்டளித்துள்ளனர். ஆனால், காங்கிரஸ் கட்சியை புறக்கணித்தது ஏன்? என்றும் நெட்டிசன்கள் பிரியங்காவிடத்தில் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கிடையே, இன்று காலையில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கியதும் ஏராளமான ஆம் ஆத்மி தொண்டர்கள் டெல்லியிலுள்ள கட்சி அலுவலகம் முன்பு குவிந்தனர். பாரதிய ஜனதா கட்சியின் கை ஓங்கவே, கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் கலைய தொடங்கினர். அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் ஷிசோடியா தோல்வியை தழுவியதும் கட்சி அலுவலகத்தில் கடைசியாக எஞ்சியிருந்த மூன்று பேரும் அலுவலகத்தின் கேட்டை இழுத்து மூடி விட்டு வீட்டுக்கு புறப்பட்டு விட்டனர்.
டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை சந்தித்துள்ள நிலையில், மதுபான ஊழலால் அரவிந்த் கெஜ்ரிவாலின் இமேஜ் சிதைந்ததே காரணம் என அரவிந்த் கெஜ்ரிவாலின் முன்னாள் குருவான அன்னா ஹசாரே கருத்து தெரிவித்துள்ளார்.