எதிர்கட்சிகள் கூட்டம்: புறக்கணிக்கும் முக்கிய தலைவர்கள்!

அரசியல் இந்தியா

மக்களவைத் தேர்தலையொட்டி பாட்னாவில் நாளை (ஜூன் 23) நடைபெற உள்ள எதிர்கட்சிகள் கூட்டத்தை ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உள்ளிட்ட கட்சிகள் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளன.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்துவதற்காக பிகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ் குமார் எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பாஜகவுக்கு எதிரான மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் இந்த கூட்டமானது பிகார் மாநில தலைநகரம் பாட்னாவில் நாளை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த கூட்டத்தில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, அக்கட்சியின் தலைவர் ராகுல் காந்தி, தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே, உத்தரபிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ்,  தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் உள்ளிட்ட 20 தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர்.

ஆம் ஆத்மி கட்சியின் நிபந்தனை!

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு முக்கிய நிபந்தனை விதித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி.

வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் டெல்லி அரசை கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்ட அவசர சட்ட மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த மசோதாவை எதிர்க்க வேண்டும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், நாட்டில் உள்ள முக்கிய எதிர்கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.

அவருக்கு மம்தா பானர்ஜி, மு.க.ஸ்டாலின், உத்தவ் தாக்க்ரே, சரத் பவார் உள்ளிட்டவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஜூன் 20ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த ஆம் ஆத்மி கட்சி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லி அரசை கட்டுப்படுத்தும் மத்திய அரசின் அவசரச் சட்டம் குறித்த தனது நிலைப்பாட்டை காங்கிரஸ் கட்சி தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரியிருந்தார்.

இந்நிலையில், நாளை நடைபெறும் எதிர்க்கட்சி கூட்டத்திற்கு முன்னதாக, மத்திய அரசின் அவசரச் சட்டம் மசோதாவை காங்கிரஸ் எதிர்க்க உறுதியளிக்க வேண்டும் என்றும், இல்லையென்றால் எதிர்கட்சி கூட்டத்தில் ஆம் ஆத்மி கட்சி கலந்துகொள்ளாது என கூறியதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  

பாஜகவும், காங்கிரஸும் ஒன்றுதான்

பகுஜன் சமாஜ் கட்சியின் தேசிய தலைவர் மாயாவதியும் எதிர்கட்சிகளின் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.

அவர், ”பாஜகவும், காங்கிரஸும் ஒன்றுதான். அதனால் இந்த கூட்டத்தில் தான் பங்கேற்க போவதில்லை என்றும், எதிர்கட்சிகள் பாஜகவிற்கு எதிராக கைகளை தான் இணைத்துள்ளன. இதயங்களை அல்ல” என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து ஜேடியு கட்சி தலைமை செய்தி தொடர்பாளர் கே.சி. தியாகி கூறுகையில், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக எதிரான கூட்டணியில் பிஎஸ்பி அங்கம் வகிக்காது என்று மாயாவதி ஏற்கெனவே கூறிவிட்டார். பிறகு நாங்கள் ஏன் அவரை அழைக்க வேண்டும்?” என்று தெரிவித்துள்ளார்.

சிரோமணி அகாலி தளம்?

அதே போன்று விவசாயிகள் போராட்டத்தின் போது பாஜகவை கடுமையாக எதிர்த்த சிரோமணி அகாலி தளம், எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து தனது நிலைப்பாட்டை இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்டோபர் ஜெமா

செந்தில்பாலாஜி வழக்கு: என்.ஆர்.இளங்கோ சுட்டிக்காட்டிய தீர்ப்புகள் என்னென்ன?

வெளியானது விஜய்யின்’நா ரெடி’பாடல் லிரிக் வீடியோ!

+1
1
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *