ஆம் ஆத்மி தோல்வி : டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல்?

Published On:

| By Kavi

டெல்லியில் ஆம் ஆத்மி தோல்வி அடைந்து, பாஜக வெற்றி உறுதியாகியிருக்கும் நிலையில் டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக சோஷியல் மீடியாக்களில் செய்திகள் பரவின. Delhi Chief Secretariat Sealed

டெல்லியில் 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்று இன்று (பிப்ரவரி 8) வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. மதியம் 2.56 மணியளவில் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின் படி, பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்று, 30 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது. ஆம் ஆத்மி 11 இடங்களில் வெற்றி பெற்று 12 இடங்களில் முன்னிலையில் இருக்கிறது.

பாஜகவின் வெற்றி உறுதி செய்யப்பட்ட நிலையில், அக்கட்சியினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். முதல்வரை தேர்தெடுப்பது உள்ளிட்ட பணிகளில் பாஜக தலைமை ஈடுபட்டுள்ளது.

இந்தநிலையில், டெல்லி அரசு நிர்வாகத்தின் துணை செயலாளர் பிரதீப் தயாள் அனைத்து துறை செயலாளர்கள், இணை செயலாளர்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தலைமை செயலகத்தில் உள்ள ரெக்கார்டுகளை பாதுகாக்கும் வகையில் பொது நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் எந்த கோப்புகள்/ஆவணங்கள், கணினி மென்பொருள்கள், ஹார்டு டிஸ்க்குகள், டெல்லி செயலக வளாகத்திற்கு வெளியே எடுத்துச் செல்லக் கூடாது. சம்பந்தப்பட்ட துறை பொறுப்பாளர்கள் கோப்புகள், ஆவணங்கள், கணினியில் உள்ள கோப்புகள் ஆகியவை வெளியே செல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும்.

இந்த உத்தரவு செயலாளர்களின் அலுவலகங்கள், அமைச்சர்களின் கேம்ப் அலுவலகங்களுக்கும் பொருந்தும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தசூழலில் சோசியல் மீடியாக்களில் டெல்லி தலைமை செயலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின.

ஆனால், இது தவறான தகவல் என்றும், தலைமை செயலகம் வழக்கம்போல் செயல்படுகிறது. ஆவணங்கள், கோப்புகள், தரவுகள், மடிக்கணினிகள் ஆகியவை எந்தவொரு அலுவலகத்திலிருந்தும் யாராலும் எடுத்துச்செல்லப்படவில்லை என்று டெல்லி தகவல் மற்றும் விளம்பரத் துறை இயக்குநரகம் கூறியுள்ளது. Delhi Chief Secretariat Sealed

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share