டெல்லியில் காரில் மாட்டிய இளம்பெண்ணை 12கிலோ மீட்டர் தூரம் இழுத்துச் சென்று கொன்ற குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சி நடப்பதாகக் கூறி ஏராளமானவர்கள் போராட்டத்தில் குதித்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
நேற்று(ஜனவரி 1) அதிகாலையில் வடமேற்கு டெல்லியில் உள்ள கஞ்சவாலா என்ற இடத்தில் காரில் சிக்கிய இளம்பெண்ணை ஈவு, இரக்கமின்றி இழுத்துச் சென்று கொன்ற நிகழ்வு நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
அஞ்சலி சிங் என்ற இளம்பெண் வேலையை முடித்துவிட்டு வீட்டுக்கு திரும்பும்போது வேகமாக வந்த கார், அந்தப் பெண்ணின் இருசக்கர வாகனத்தை இடித்தபோது காரில் அவரது ஆடையும், காலும் மாட்டியிருக்கிறது.
ஆனால் அதைக் கண்டு கொள்ளாத காரில் இருந்த 5பேரும் அந்தப் பெண்ணின் உடலை இழுத்துச் சென்றுள்ளனர். காரில் இருந்தவர்கள் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்திருக்கிறது.
எனவே இந்த வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டாலும் அவர்களை காப்பாற்ற முயற்சி நடப்பதாகவும், அஜாக்கிரதையாகவும், கவனக்குறைவாகவும் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட மரணம் என்றும் வழக்குப்பதிவு செய்திருப்பதாகக் கூறி பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதனைக் கண்டித்து ஏராளமானவர்கள், சுல்தான்புரி காவல் நிலையத்திற்கு வெளியே போராட்டம் நடத்தினர்.
இதேபோன்று துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா இல்லம் முன்பு ஆம் ஆத்மி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கேட்டு அவர்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினர். அவர்களை போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து கலைக்க முயன்றபோது பதற்றம் ஏற்பட்டது.
உயிரிழந்த அஞ்சலியின் தாய் ரேகா, “நான் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு பேசும்போது இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டிற்கு வந்து விடுவேன் என்று கூறினாள்.
பிறகு நான் மருந்து சாப்பிட்டுவிட்டு தூங்கி விட்டேன். அதற்கு பின் நடந்தது எனக்கு தெரியாது.
போலீசார் இந்த சம்பவம் ஒருவிபத்து போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கின்றனர், இது ஒரு விபத்து அல்ல.
என் மகளின் உடலில் ஒரு துணி கூட இல்லாத போது இது எப்படி விபத்து என நம்ப முடியும்? முழுமையான விசாரணை தேவை” என்று கூறியுள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் கைது செய்துள்ளதாக காவல்துறை சிறப்பு ஆணையர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) சாகர் ப்ரீத் ஹூடா தெரிவித்தார். “பிரேத பரிசோதனை செய்ய மருத்துவக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
தடய அறிவியல் ஆய்வகக் குழுக்கள் மீண்டும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தும். குற்றவாளிகள் 3 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். எப்.ஐ.ஆரில் 304 (குற்றத்திற்குரிய கொலை அல்ல) மற்றும் 120பி (குற்றச் சதி) ஆகிய பிரிவுகளைச் சேர்த்துள்ளோம்.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணைக்காக குற்றம் நடந்த இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். கார் தடயவியல் நிபுணர்களால் பரிசோதிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
அதன்பிறகே இந்த வழக்கில் உண்மை என்ன என்பது தெரிய வரும். எனினும் இளம்பெண்ணுக்கு நீதி கேட்டு டெல்லியில் போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
கலை.ரா
நிர்வாணமாக காரில் இழுத்துச் செல்லப்பட்ட இளம்பெண்: குற்றவாளிகளை தூக்கிலிட கோரிக்கை!
“கமல் புலி மாதிரி”: ராகுல் தந்த பரிசு!