சபரிமலை பொருட்கள்: அசத்தும் முஸ்லிம் கிராமம்!

Published On:

| By Selvam

கேரளாவில் சபரிமலைக்கு செல்லும் பக்தர்களுக்கு தேவையான பொருட்களை எருமேலி பகுதியில் உள்ள முஸ்லிம் மக்கள் தயாரிக்கின்றனர்.

சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆண்டுதோறும் கார்த்திகை, மார்கழி மாதங்களில் மகர விளக்கு, மண்டல பூஜை நடைபெறும். இந்த ஆண்டு நவம்பர் 17-ஆம் தேதி முதல் மண்டல பூஜை துவங்கியது.

ஒவ்வொரு ஆண்டும் கேரளாவில் சபரிமலை யாத்திரை சீசன் தொடங்குவதற்கு சில நாட்களுக்கு முன்பு எருமேலியில் உள்ள மட்டுனூர்க்கரை கிராமத்தில் பரபரப்பு தொற்றிக்கொள்கிறது.

சிவப்பு நிறத்திலான கோழி இறகுகள், கருப்பு நிறத்தில் சாயம் பூசப்பட்ட கயிறுகள், தனித்துவமாக செதுக்கப்பட்ட மரத்துண்டுகள் வீதிகள் முழுவதும் இறைந்து கிடக்கிறது.

எருமேலி பகுதி சபரிமலை யாத்திரை சீசனுக்கான 90 சதவிகித பொருட்கள் தயாரிப்பின் மையமாக மாறியுள்ளது. சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தும் அம்பு, வாள், கயிறு போன்றவை முஸ்லிம்கள் அதிகம் வசிக்கக்கூடிய எருமேலி பகுதிகளில் இருந்து தயாராகிறது.

இந்தப் பகுதியைச் சேர்ந்த 78 வயதான கோயா தெங்குமூட்டில் இதுபற்றி கூறும்போது, “சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் பயன்படுத்தும் பொருட்களை 50 ஆண்டுகளாகத் தயாரித்து வருகிறேன். கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பொருட்கள் அதிகளவில் விற்பனை ஆகவில்லை. இந்த ஆண்டு பொருட்கள் விற்பனை அதிகளவில் நடைபெற்றுள்ளது.

விரைவில் நாங்கள் தயாரித்த பொருட்கள் அனைத்தும் விற்பனை ஆகிவிடும் என்று நம்புகிறேன். கடந்த 20 வருடங்களாக எங்களது வியாபாரம் அதிகரித்துள்ளது. அண்டை மாநிலங்களில் இருந்து சபரிமலைக்கு செல்லும் பக்தர்கள் எருமேலிக்கு வருகை தந்து அதிகளவில் பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்” என்றார்.

விற்பனையாளர் வி.ஆர்.சஷி கூறும்போது, “இந்தப் பகுதியில் 10 லட்சம் கோழி இறகுகள், நான்கு லட்சத்திற்கும் அதிகமான மர அம்புகள் மற்றும் வாள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

இந்தத் தொழிலில் ஈடுபட்டுள்ள 32 குடும்பங்கள் சராசரியாக ரூ.50 ஆயிரம் வருமானம் ஈட்டும்போது, வெளிச்சந்தையில் இதன் உண்மையான மதிப்பு பல கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.

இங்குள்ள அனைத்து மக்களும் அவர்களது வயது மற்றும் மதத்தை பொருட்படுத்தாமல் சபரிமலை சீசனுக்கான பொருட்களை 24 மணி நேரமும் உற்பத்தி செய்கின்றனர். இதனை ஒரு தொழில் என்று கூறுவதை விட தலைமுறை தலைமுறையாக இங்கு வாழ்ந்து வரும் மக்களின் வாழ்க்கை முறை என்று கூறலாம்.” என்றார்.

செல்வம்

கடும் பனிப்பொழிவு: ரயில்கள் தாமதம்!

ஒரே இரவில் 6 கதைகள்: பளிச்சிடுகிறதா பவுடர்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share