”தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காக பிரார்த்திக்கும்” : மூன்றாம் சார்லஸ் உருக்கம்!

இந்தியா

பிரிட்டன் மகாராணி இரண்டாம் எலிசபெத் நேற்று முன் தினம் (செப்டம்பர் 8) காலமானார். அவருக்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்நாட்டு மக்களும் அங்குள்ள அரண்மனை முன் கூடி, மகாராணிக்குப் பூங்கொத்துக்களை வைத்து மலர் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

இந்தியா முழுவதும் நாளை (செப்டம்பர் 11) அரசு துக்கம் அனுசரிக்கும் என்றும் மூவர்ணக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் எனவும் அரசு நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில்,பிரிட்டன் நாட்டின் புதிய மன்னராக 73 வயதாகும் மூன்றாம் சார்லஸ் இன்று (செப்டம்பர் 10 ) பதவியேற்க உள்ளார். பால்மோரல் அரண்மனையிலிருந்து தனது துணைவி கமீலாவுடன் பக்கிங்காம் அரண்மனைக்குத் திரும்பிய மூன்றாம் சார்லஸ் அங்கு கூடியிருந்த மக்கள் முன் நேற்று இரவு தோன்றி உரையாற்றினார்.

“வாழ்நாள் முழுவதும் நாட்டிற்காகச் சேவை செய்ய வேண்டும் என்ற மகாராணி எலிசபெத்தின் வாக்குறுதியை நான் தொடருவேன்” என்று தனது இரங்கல் செய்தியில் கூறினார்.

“ஆழ்ந்த துக்க உணர்வுடன் இன்று உங்களுடன் பேசுகிறேன், என் அன்பிற்கினிய அன்னை, மாட்சிமை பொருந்திய மகாராணி, எனக்கும் என் குடும்பத்தினருக்கும் ஒரு உத்வேகமாகவும் முன்மாதிரியாகவும் திகழ்ந்தார்.


“எந்தவொரு குடும்பமும் தங்கள் தாயின் அன்பு, பாசம், வழிகாட்டுதல், புரிதல் மற்றும் முன்மாதிரி ஆகியவற்றிற்காக அவருக்குச் செலுத்த வேண்டிய கடமையை எப்படிச் செய்யுமோ, அதேபோல் நாங்களும் எங்கள் இதயப்பூர்வமான கடனை செலுத்தக் கடமைப்பட்டுள்ளோம். ராணி எலிசபெத் தனது வாழ்நாளை முழுமையாக வாழ்ந்து மறைந்துள்ளார்” என்றார்.

மேலும் அவர், “70 ஆண்டுகளுக்கும் மேலாக, ராணியாக, என் அம்மா, பல நாடுகளின் மக்களுக்குச் சேவை செய்தார் என்பதை மிகுந்த நன்றி உணர்வுடன் நினைவுகூரக் கடமைப்பட்டுள்ளேன், எனது குடும்பத்தினர் அனைவரும் அனுபவிக்கும் தனிப்பட்ட துயரத்தை, பிரிட்டன் மற்றும் ராணி அரச தலைவராக இருந்த காமன்வெல்த் மற்றும் உலகம் முழுவதும் அனைத்து நாடுகளிலும் உள்ள உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறோம்”என்றார்.

“ராணி பல தியாகங்களைச் செய்தவர். அவரது அர்ப்பணிப்பு “மாற்றம் மற்றும் முன்னேற்றத்திற்கான நேரங்களிலும், மகிழ்ச்சி மற்றும் கொண்டாட்ட காலங்களிலும், சோகம் மற்றும் இழப்பு நேரங்களிலும்” வலுவாக இருந்தது. மக்கள் அவர் மீது வைத்த பாசம், பாராட்டு மற்றும் மரியாதை அவருடைய ஆட்சியின் அடையாளமாக மாறியது. இன்முகத்துடன் அரவணைத்து செல்லும் அவரது குணம் மக்களை சிறந்தவர்களாக வைத்திருக்க உதவியது என்பதற்கு எனது குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினரும் சாட்சி” என்று அவர் கூறினார். .

“இத்தனை ஆண்டுகளாக விடாமுயற்சியுடன் சேவை செய்த என் அன்பான அம்மா, மறைந்த என் அப்பாவுடன் சேருவதற்கான பயணத்தைத் தொடங்கும் வேளையில் நன்றியுள்ளவனாக நான் இதைச் சொல்ல கடமைப்பட்டிருக்கிறன என்று தெரிவித்த சார்லஸ்,

“தேவதை கூட்டம் உங்கள் இளைப்பாறலுக்காகப் பிரார்த்திக்கும்” என்று சார்லஸ் தனது உரையில் உருக்கமாகப் பேசினார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

Leave a Reply

Your email address will not be published.