மேற்கு வங்கம் மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் இன்று (ஜூன் 17) காலை 9 மணியளவில் கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் ரயில் தடம் புரண்டு விபத்து ஏற்பட்டுள்ளது.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் அசாம் மாநிலம் சில்சாரில் இருந்து மேற்குவங்கத்தின் சேல்டா மாவட்டம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்தது. ரங்கபாணி மற்றும் நிஜ்பரி ரயில் நிலையங்களுக்கு இடையே சென்று கொண்டிருந்தபோது, அதன் மீது பின்னால் வேகமாக வந்த சரக்கு ரயில் மோதியதில் விபத்து ஏற்பட்டதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
இந்த விபத்தால் எக்ஸ்பிரஸ் ரயிலின் பின்புறம் உள்ள 3 முதல் 4 பெட்டிகள் தடம்புரண்டு இருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், எக்ஸ்பிரஸ் ரயிலில் உள்ள பயணிகளை மீட்கும் பணியில் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணியில், மாவட்ட ஆட்சியர், காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
விபத்து குறித்த முதல் கட்ட தகவலின்படி, சரக்கு ரயில் சிக்னலில் நிற்காமல் முன்னே சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா ரயிலின் பின்புறம் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது. பயணிகள் ரயிலின் பின்பகுதியில் 2 பார்சல் பெட்டிகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இந்த விபத்தில், 5 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 25 பேர் காயமடைந்து மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் டார்ஜிலிங் மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அபிஷேக் ராய் தெரிவித்துள்ளார்.
இதன் காரணமாக, விபத்து நடைபெற்ற பகுதிக்கு தற்போது 15 அவசர ஊர்திகள் வரவழைக்கப்பட்டுள்ளன. மேலும், 2 தேசிய பேரிடர் மீட்பு படையினர் மற்றும் மாவட்ட காவல்துறை அதிகாரிகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
டெல்லியில் உள்ள ரயில்வே அறையில் இருந்து மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விபத்து குறித்த நிலைமையை கண்காணித்து வருகிறார்.
விபத்தில் சிக்கியுள்ள பயணிகளை மீட்பதற்காக கூடுதல் அதிகாரிகளை நியமித்துள்ளதாக ரயில்வேத்துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
ரயில் விபத்து குறித்த தகவல்களை அறிய ரயில்வே நிர்வாகம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 03323508794, 03323833326 என்ற எண்களில் தொடர்பு கொண்டு ரயில் விபத்து தொடர்பான விவரங்களை தெரிந்துகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மம்தா பானார்ஜி வருத்தம்
இந்த விபத்து குறித்து மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, “டார்ஜிலிங்கின் பான்சிதேவாவில் நடந்த ரயில் விபத்து குறித்த தகவலறிந்து வருந்துகிறேன்.
கஞ்சன்ஜங்கா எக்ஸ்பிரஸ் ரயில் மீது சரக்கு ரயில் மோதியதாக தகவல் கிடைத்துள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், மருத்துவர்கள், பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர். ஆம்புலன்ஸ்களும் விரைந்துள்ளன” என்று தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
T20 World Cup 2024: இந்தியாவுடன் ‘Super 8’ சுற்றுக்கு முன்னேறிய 7 அணிகள் எவை?
முகூர்த்த நாளில் குறைந்த தங்கம் விலை… எவ்வளவு தெரியுமா?