ஒரு வியாபாரக் கதை
ராஜன் குறை
(சற்றே நீளம்தான்; ஆனால் சுவாரசியமான கதை)
அகில இந்திய அளவில் பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் B என்று வைத்துக்கொள்வோம். பொதுவாக விலையுயர்ந்த வீட்டு உபயோக பொருட்களை உற்பத்தி செய்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.
அவர்கள், B கம்பெனி, புதிய குளியல் சோப்பினை தயாரிக்கிறார்கள். சில மாநிலங்களில் அவர்களுக்குள்ள விற்பனைக் கட்டமைப்பு அதனை விற்பதற்குப் போதுமானதாக உள்ளது. சில மாநிலங்களில் வேறு விற்பனைப் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் இவ்வாறான ஒப்பனைப் பொருட்களை விற்பனை செய்யும் நிறுவனம் ஒன்று மிக வலுவான விற்பனை வலைப்பின்னலுடன் இருக்கிறது. அதன் பெயர் A என்று வைத்துக்கொள்வோம். அவர்கள் மாநில அளவில் உயர்தர சுகாதாரப் பொருட்களை தயாரிக்கும் D கம்பெனியின் பொருட்களை கலப்படம் செய்து மலிவாக பரவலாக விற்பனை செய்வதில் வெற்றி கண்ட கம்பெனி.
அதனால் அகில இந்திய B கம்பெனி தன்னுடைய வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைப் பிரிவைவிட, இந்த A கம்பெனியிடம் சோப்பு விற்பனையைக் கொடுப்பதே நல்லது என்று நினைக்கிறது. கொடுக்கிறது.
விற்பனை சரியில்லை. அதனால் பிரச்சினை வருகிறது. நாற்பதாயிரம் சோப்புதான் விற்பனையாகிறது. தயாரிப்பு கம்பெனி இரண்டு இலட்சம் சோப்பை விற்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கிறது. இல்லாவிட்டால் கமிஷனை குறைப்பேன்; பெனால்டி போடுவேன் என்று நெருக்கடி கொடுக்கிறது.
விற்பனைக் கம்பெனி நெருக்கடியில் இருக்கிறது. அதன் வழக்கமான தொழிலான D கம்பெனி பொருட்களை கலப்படம் செய்து விற்பதும், அகில இந்திய B கம்பெனி சோப்பை விற்றதால் படுத்துவிட்டது. இப்போது அகில இந்திய B கம்பெனியும் ஏற்கமுடியாத டார்கெட் கொடுக்கிறது. நிபந்தனை போடுகிறது.
இந்த சமயத்தில் B கம்பெனியின் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனைப் பிரிவு நாங்களே சோப்பையும் விற்கிறோம். உடனே அதிகம் விற்காவிட்டாலும், கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்திக் கொள்ளலாம். நம் உண்மை போட்டியாளரான D கம்பெனியின் சுகாதார பொருட்களை கலப்படம் செய்து விற்கும் A கம்பெனியால்தான் நமக்கு விற்பனை சரியில்லை என்று கூறுகிறது.
இதனால் கோபமடைந்த A கம்பெனி, நாங்கள் இனிமேல் B கம்பெனியின் ஏஜெண்ட் அல்ல என்று அறிவிக்கிறது. இப்போது கேள்வி அகில இந்திய B கம்பெனி டார்கெட்டை குறைக்குமா, நாமே விற்பதைவிட இந்த A கம்பெனி அதிகம்தான் விற்கிறது என்பதை உணர்ந்து உடன்பாட்டை புதுப்பிக்குமா என்பது கேள்வி.
அதற்குள் சிலர் ஆஹா, இனிமேல் A கம்பெனி சுத்த சுகந்தமான புதிய சோப்பை தயாரிக்கப் போகிறது. மாநில அளவில் D கம்பெனியின் மோனோபலியை முறியடித்து சந்தையில் ஆரோக்கியமான போட்டியை உருவாக்கப் போகிறது என்றெல்லாம் கற்பனைக் கோட்டை கட்டுகிறார்கள். ஒரே உற்சாகம்.
அய்யா, A கம்பெனி எந்தக் காலத்தில் எதையும் சொந்தமாக தயாரித்தது, இன்றைக்குத் தயாரிப்பதற்கு? D கம்பெனி பொருட்களை கலப்படம் செய்து விற்பதற்குப் பதில், அகில இந்திய B கம்பெனி ஏஜெண்ட்டாகவே போகலாம் என்றுதானே நினைத்தார்கள்? அவர்களுக்கு எதையுமே சொந்தமாகத் தயாரிக்கத் தெரியாதே?
அதனால் அதிகம் உணர்ச்சிவசப்படாமல் வியாபாரச் சிக்கல் தீரும் வரை காத்திருங்கள். உங்களுக்கு D கம்பெனியின் சுகாதார பொருட்கள் பிடிக்கவில்லை, கலப்படம்தான் வேண்டுமென்றால் அதற்கு என்ன செய்வது. A கம்பெனி B கம்பெனியின் விற்பனை ஏஜெண்ட்டானதில் அந்த ஆற்றலையும் இழந்துவிட்டதே. உங்கள் உற்சாகத்தில் அவர்கள் மேல் சுமையை ஏற்றாதீர்கள்.
கட்டுரையாளர் குறிப்பு
ராஜன்குறை கிருஷ்ணன், பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுடெல்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com
அதிமுக தலைமையில் தனி கூட்டணி அமைப்போம்: ஜெகன்மூர்த்தி
விஜயலட்சுமி ஆஜராக உயர்நீதிமன்றம் உத்தரவு!