சுருண்டு விழுந்து மாணவி உயிரிழப்பு : மாரடைப்பு காரணமா?

இந்தியா

ராஜ்காட்டில் 9ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருப்பது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமீப காலமாக இளைஞர்கள் பலர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. 50 வயதுக்கு மேல்தான் இதுபோன்ற நோய்கள் பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தற்போது வயது வித்தியாசம் இன்றி அனைத்து வயதினரையும் மாரடைப்பு அச்சுறுத்துகிறது.

இந்தநிலையில் குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் 9ஆம் வகுப்பு படித்து வந்த 15 வயது சிறுமி மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.

குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் உள்ள ஜஸ்தன் தாலுகாவைச் சேர்ந்த 15 வயது சிறுமி சாக்‌ஷி ரஜோசாரா. நேற்று வழக்கம் போல் தான் படித்து வந்த சாந்தபா கஜேரா பள்ளிக்கு வருகை தந்தார்.

நேற்று பள்ளியில் தேர்வு நடந்ததாகக் கூறப்படும் நிலையில் தேர்வறைக்குள் நுழைந்ததும் மாணவி சுருண்டு விழுந்தார். இதைக் கண்டதும், ஆசிரியர்கள் மாணவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

ஆனால் அவர் இறந்துவிட்டதாகவும், மாரடைப்பு காரணமாக இறந்திருக்கலாம் என்றும் மருத்துவர்கள் கூறியிருக்கின்றனர். இதை உறுதிப்படுத்துவதற்காக மாணவியின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

அவரது பெற்றோரிடம் மாணவி  உடல் நலக்குறைவுடன் இருந்தாரா, இதயநோய் தொடர்பான பாதிப்பு ஏதேனும் அவருக்கு இருந்ததா எனவும் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

அதே சமயம் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவிக்கு ஏதேனும் அழுத்தம் கொடுத்தார்களா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

குஜராத்தில் சமீப நாட்களாக மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நவராத்திரியின் போது கர்பா நடனத்தில் ஈடுபட்டிருந்த 10 பேர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தனர். இது குஜராத் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், கடுமையான கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் அதிக வேலை, தீவிர உடற்பயிற்சியை மேற்கொள்ள வேண்டாம் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வாகனங்களுக்கு அபராதம்: வேக கட்டுப்பாடு இன்று முதல் அமல்!

’1 Year of Love Today’: ஸ்பெஷல் வீடியோ வெளியானது!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
2