கடந்த மூன்று நாட்களில் 98 பேர் உத்தரப்பிரதேசம், பீகாரில் வெயில் கொடுமையால் பலியாகியுள்ளனர்.
இந்தியாவில் பருவமழை இன்னும் தீவிரமடையவில்லை. 20ஆம் தேதிக்குப் பிறகுதான் மழை தீவிரமடையும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. அதேநேரம் வட மாநிலங்களில் வெயிலின் தாக்கம் மிகவும் கடுமையாக இருக்கிறது. அதுவும் உத்தரப்பிரதேசத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது.
அந்த மாநிலத்திலுள்ள பல்லியா மாவட்டத்தில், வெயிலின் கொடுமை தாங்க முடியாமல் நூற்றுக்கணக்கானோர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
அதிகரிக்கும் வெப்பம் காரணமாக மூச்சுவிடுவதில் சிரமம், காய்ச்சல் போன்ற பிரச்னைகளால் கடந்த மூன்று நாள்களில் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 54 பேர் உயிரிழந்துவிட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.
அதேபோல் பீகாரில் கடந்த மூன்று நாட்களில் 44 பேர் வெயிலின் கொடுமையால் வெப்ப பக்கவாதத்தால் இறந்துள்ளனர். இது தவிர மேலும் 400-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் திவாரி, “வெயில் கொடுமை காரணத்துக்காகத்தான் உயிரிழப்புகள் நடைபெறுகின்றனவா என்பதைக் கண்டுபிடிக்க லக்னோவிலிருந்து தனிப்படை அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது.
அதிகப்படியான வெப்பம், குளிர் காரணமாக மூச்சுவிடுதல் பிரச்னை இருப்பவர்கள், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருக்கிறது. வெயிலின் தாக்கம் அதிகரித்ததும் உயிரிழப்புக்குக் காரணமாகும். கடந்த மூன்று நாட்களில் இறந்தவர்களில் பெரும்பாலானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள்” என்று தெரிவித்துள்ளார்.
வெயிலின் தாக்கம் காரணமாக மருத்துவமனைகளில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நோயாளிகள் வந்து குவிந்திருப்பதால் படுக்கை வசதிகூட இல்லாமல் இருக்கிறது. இதனால் நோயாளிகள் தரையில் படுக்கவைக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. உயிரிழப்புக்கு வெயில் காரணமா அல்லது மர்மநோய் எதுவும் காரணமா என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
ராஜ்
கிச்சன் கீர்த்தனா: தக்காளி இடியாப்பம்!
ஐந்து நடிகர்களுக்கு தடை: அதிரடியில் இறங்கும் தயாரிப்பாளர்கள் சங்கம்!