லாரி, பேருந்துக்கு இடையே சிக்கிய வேன்: 9 பேர் பரிதாப பலி!
கர்நாடகாவில் நேற்று நள்ளிரவில் (அக்டோபர்16) நடைபெற்ற பயங்கர சாலை விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் பலியாகியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டத்தில் இருந்து நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சிவமொக்கா நோக்கிச் சென்ற அம்மாநில அரசு பேருந்து, சாலையில் முன் சென்று கொண்டிருந்த டெம்போ டிராவலர் வேன் மீது மோதியது.
இதில் பயணிகளுடன் வந்த டெம்போ டிராவலர் வேன் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் எதிர் திசையில் வந்த பால் லாரி மீது மோதியது.
இதன் விளைவாக, பேருந்து மற்றும் பால் லாரிக்கு இடையே டெம்போ டிராவலர் வேன் சிக்கி நசுங்கியது.
இந்த விபத்தில் 4 குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் சம்பவ இடத்திலேயே இறந்த நிலையில், 3 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர்.
இறந்த 9 பேரும் பால் லாரி மற்றும் பேருந்துக்கு இடையே சிக்கிய டெம்போ டிராவலர் வேனில் பயணம் செய்தவர்கள் ஆவர்.
மேலும் விபத்தில் படுகாயமடைந்த 10 பேரையும் அப்பகுதி மக்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் மூன்று வாகனங்களும் நொறுங்கிய நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற ஹாசன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஹரிராம் சங்கர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நான்கு வழிச்சாலை விரிவாக்கத்திற்காக எடுக்கப்பட்ட நெடுஞ்சாலையில் இந்த விபத்து நடந்துள்ளது.
அங்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வரும் நிலையில், மாற்றுப்பாதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
பொருளாதார வல்லுனர்களின் ஆய்வுகளும்… நோபல் பரிசும்! – பகுதி 3
மீண்டும் தயாரிப்பாளர் அவதாரத்தில் பூங்குழலி