கேரளாவின் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி நெடுஞ்சாலையில் நேற்று(அக்டோபர் 5) இரவு தனியார் சுற்றுலா பேருந்து ஒன்று அரசு பேருந்து மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பள்ளி மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 38 பேர் காயமடைந்துள்ளனர்.
இது குறித்து கேரளா போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கூறுகையில், “கேரளா அரசு பேருந்து கொட்டாரக்கரா பகுதியிலிருந்து 81 பயணிகளை ஏற்றிக் கொண்டு நேற்று(அக்டோபர் 5) இரவு கோயம்புத்தூர் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.
எர்ணாகுளத்தில் உள்ள வித்யாநிகேதன் உயர்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 42 பள்ளி மாணவர்கள் மற்றும் 5 ஆசிரியர்களை ஏற்றிக் கொண்டு தனியார் சுற்றுலா பேருந்து கோவையை நோக்கி சென்றுள்ளது.
இரவு 11.30 மணியளவில் பாலக்காடு மாவட்டம் வடக்கன்சேரி நெடுஞ்சாலையில் அதிக வேகமாகச் சென்று கொண்டிருந்த தனியார் சுற்றுலா பேருந்து முன்னே சென்று கொண்டிருந்த காரை முந்தி செல்ல முயற்சித்துள்ளது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த அரசு பேருந்து மீது மோதியதில் இரண்டு பேருந்துகளும் நிலை தடுமாறி கவிழ்ந்துள்ளன.
இந்த விபத்தில் 5 மாணவர்கள், 1 ஆசிரியர் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்த 38 பேரும் பாலக்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
லேசான காயமடைந்தவர்கள் நலமாக இருக்கிறார்கள். அவர்களுக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.” என்று போக்குவரத்துத் துறை அமைச்சர் கூறினார்.
கேரளாவின் வருவாய்த் துறை அமைச்சர் கே.ராஜன் இது குறித்து செய்தியாளர்களிடம் கூறியது, “இந்த விபத்து எப்படி நடந்தது என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
மேலும், விபத்து ஏற்பட்ட இடத்தில் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இதனால் வருங்காலத்தில் இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க முடியும்” என்று கூறினார்.
மோனிஷா
இந்தியாவில் 4 இருமல் மருந்துகளுக்கு தடை ஏன்? உலக சுகாதார நிறுவனம்!
தமிழ்நாட்டில் மிக கனமழை… இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!