உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், கன மழை காரணமாக சுவர் இடிந்து விழுந்து, இன்று (செப்டம்பர் 16) அதிகாலை 9 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் எதிர்பாராதவிதமாக பெய்த கன மழை காரணமாக, பல பகுதிகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் நகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் பள்ளிகளுக்கு கன மழை காரணமாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
லக்னோ மாவட்டத்தில் ஒரு மாதத்தில் பெய்யும் மழை அளவு கிட்டத்தட்ட ஒரே நாளில் பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் லக்னோவில் 15.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

லக்னோவில் கன மழை காரணமாக, சுவர் இடிந்து விழுந்ததில் ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில், ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் கவலைக்கிடமான நிலையில் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுவர் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிவாரணத்தொகை வழங்கப்படும் என்று உத்தரப்பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
அதனைப்போல, இந்த விபத்தில் காயமடைந்தவர்களின் சிகிச்சைக்காக தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
விபத்து நடந்தது குறித்து லக்னோ சட்டம் ஒழுங்கு கமிஷனர் பியுஷ் மோர்டியா கூறுகையில், “சில தொழிலாளர்கள் லக்னோவின் தில்குஷா பகுதியில் உள்ள ராணுவ உறைவிட பகுதிக்கு வெளியே குடிசை அமைத்து தங்கி வந்துள்ளனர்.
நேற்று (செப்டம்பர் 15) இரவு பெய்த கன மழை காரணமாக, ராணுவ உறைவிட வளாகத்தின் எல்லை சுவர் இடிந்து தொழிலாளர்கள் தங்கியிருந்த குடிசையின் மேல் விழுந்துள்ளது.
தகவல் கிடைத்து சம்பவம் நடந்த இடத்திற்கு நாங்கள் அதிகாலை 3 மணியளவில் சென்றோம். இடிபாடுகளில் இருந்து ஒன்பது பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டது. ஒருவரை மட்டும் உயிருடன் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவனையில் சேர்த்துள்ளோம்” என்று அவர் தெரிவித்தார்.
செல்வம்