ஊழலுக்கு எதிராக போராட வேண்டிய நேரமிது என்று சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி பேசினார்.
நாட்டின் 76ஆவது சுதந்திர தினம் இன்று (ஆகஸ்ட் 15)இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி காலை 7.30 மணியளவில் தேசியக்கொடி ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
இதனால் தலைநகர் டெல்லியில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஹெலிகாப்டரில் இருந்து தேசியக்கொடிக்கு மலர் தூவப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், முப்படை வீரர்கள், நடைபாதை வியாபாரிகள், சவக்கிடங்கு தொழிலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், “இந்தியாவின் பன்முகத்தன்மை மிகவும் வலுவானது. இந்தியா ஜனநாயகத்தின் தாய். ஒவ்வொரு இந்தியருக்கும் சுதந்திர தின வாழ்த்துக்கள். வளர்ச்சியை நோக்கி இந்தியா பயணிக்க வேண்டிய நேரம் இது. இந்திய சுதந்திர போராட்ட வரலாறு என்பது நீண்ட நெடியது. நாம் வரலாற்றில் முக்கியமான இடத்தை எட்டியிருக்கிறோம். பெண்கள் தங்களது வீரத்தை சுதந்திர போராட்டத்தில் வெளிப்படுத்தினார்கள். நாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் வாழ்வை அர்ப்பணித்த நேதாஜி, அம்பேத்கர், சாவர்க்கருக்கு நாட்டு மக்கள் சார்பில் நன்றி கூறுகிறேன். பாரதியார், வேலு நாச்சியார், பகத்சிங் உள்ளிட்ட புரட்சியாளர்களுக்கு நாடு நன்றி செலுத்துகிறது.
இந்தியப் பெண்களின் வலிமையைப் பார்க்கும் போது இந்தியா பெருமை கொள்கிறது.. இந்தியா புதிய உத்வேகத்தை நோக்கிச் செல்லும். சுதந்திர போராட்ட வீரர்கள், மங்கள் பாண்டே, பகத்சிங், சந்திரசேகர் ஆசாத், ஆங்கிலேய ஆட்சியாளர்களின் அடித்தளத்தை அசைத்தார்கள் அவர்களுக்கு இந்நாளில் நன்றி செலுத்துகிறேன்.
இந்தியப் பிரிவினையின் கொடூரங்களை ஆகஸ்ட் 14 அன்று நினைவு கூர்ந்தோம். 75 ஆண்டு கால பயணத்தில் இந்தியா பல சவால்களை எதிர்கொண்டது.
இந்தியா தனது திறமையை உலக அரங்கில் நிரூபித்திருக்கிறது, இதற்காக நமது நாட்டு மக்கள் பல முயற்சிகளை மேற்கொண்டார்கள். அவர்கள் தங்கள் உறுதியை கைவிடவில்லை. சுதந்திர போராட்டத்தில் பழங்குடியின மக்களின் தியாகத்தை மறந்து விட முடியாது.
பல பிரச்சனைகளை சந்தித்தாலும் இந்தியா முன்னோக்கி செல்கிறது. இந்தியாவின் பன்முகத்தன்மை மிகவும் வலுவானது. இந்திய மக்கள் மாற்றத்தை விரும்புவதோடு அதற்கு பங்களிப்பும் செய்கிறார்கள். ஓவ்வொரு அரசாங்கமும் அவர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டும்.
இந்த 75 வருட பயணத்தில் அனைத்து மக்களின் முயற்சியாலும், உயர்வு மற்றும் தாழ்வுகளுக்கு மத்தியில் நம்மால் முடிந்த இடத்தை அடைந்திருக்கிறோம். 2014ஆம் ஆண்டு செங்கோட்டையில் கொடியேற்றும் வாய்ப்பை இந்திய மக்கள் எனக்கு அளித்தார்கள்.
வரும் காலங்களில் நாம் ஐந்து விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பெரிய தீர்மானங்களுடன் இந்தியா முன்னேற வேண்டும், அடிமைத் தனத்தின் அனைத்து தடயங்களையும் அழிக்க வேண்டும், நம் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுங்கள், ஒற்றுமையே வலிமை என உணருங்கள், அனைவரும் தங்கள் கடைமைகளைச் செய்யுங்கள். இந்த ஐந்து விஷயங்களை கடைபிடியுங்கள்.” என்றார்.
மேலும் அவர், “டிஜிட்டல் மற்றும் ஸ்டார்ட் அப்கள் இந்தியாவில் வளர்ந்து வருகின்றன. இதனால் கிராமப்புறங்களில் இருந்து நிறைய திறமை மிக்கவர்கள் வருகிறார்கள்.
இந்தியராக இருப்பது தான் நமது ஒற்றுமையின் அர்த்தம். இன்று நாம் எதிர்கொள்ளும் இரண்டு பெரிய சவால்கள், ஊழல் மற்றும் குடும்ப நலனுக்காக செயல்படுதல். ஊழல் நாட்டை கரையான் போல் சூறையாடுகிறது. குடும்ப அரசியல் தான் ஊழலுக்கு வழிவகுக்கிறது
அதனை எதிர்த்து நாம் போராட வேண்டும். குடும்ப நலனுக்கு ஆதரவாக செயல்படுபவர்களுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” எனவும் கூறினார்.
செல்வம்
இந்திய சுதந்திரத்துக்கு 75 வயது நிறைந்தது! வளர்ந்து செழிக்கட்டும் இந்தியக் கூட்டாட்சி குடியரசு!