நிபா வைரஸ் அதிகரிப்பு: 706 பேரை பட்டியலிட்ட சுகாதாரத் துறை!

இந்தியா

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் 706 பேர் தொடர்பில் இருந்ததாக அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் நிபா வைரஸ் பரவி வருகிறது. இந்த நிபா வைரஸ் தொற்றால் கோழிக்கோடு மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தை சேர்ந்த 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோழிக்கோடு தனியார் மருத்துவமனையில் இருக்கும் 24 வயதான ஊழியர் ஒருவருக்கு நிபா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளதாக கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் இன்று (செப்டம்பர் 14) தெரிவித்துள்ளார்.

இதனால் தற்போது கேரளாவில் நிபா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரள சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறுகையில், “தற்போதைய நிலவரப்படி நிபா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களுடன் 706 பேர் தொடர்பில் இருந்துள்ளனர். அதில் 77 பேர் அதிக ஆபத்தான நிலையில் உள்ளனர். மேலும் 706 பேரில் 153 பேர் சுகாதாரப் பணியாளர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள யாருக்கும் தற்போது வைரஸ் அறிகுறிகள் இல்லை. மருத்துவமனைகளில் தற்போது 13 பேர் கண்காணிப்பில் இருந்து வருகின்றனர். அவர்களுக்கு தலைவலி போன்ற லேசான அறிகுறிகள் மட்டுமே உள்ளது.

இந்த முறை கேரளாவில் பரவி வரும் நிபா வைரஸ் வங்காளதேச மாறுபாடாகும். இந்த வகை நிபா வைரஸில் தொற்று விகிதம் குறைவாக இருந்தாலும் அதிக இறப்பு விகிதத்தை கொண்டுள்ளது.

இந்த வகை வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றொருவரிடம் பரவுகிறது. காய்ச்சல், தலைவலி, இருமல், மூச்சுத் திணறல், வாந்தி ஆகியவை நிபா வைரஸின் அறிகுறியாகும். ஆனால் சில நேரங்களில் மூளையில் வீக்கத்தை ஏற்படுத்தி மூளைக் காய்ச்சலை ஏற்படுத்துவதால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

நிபா வைரஸ் தாக்கும் அபாயம் அதிகமாக உள்ளவர்கள் தங்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோழிக்கோட்டில் திருவிழாக்கள் மற்றும் விழாக்களில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தடுக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

கோழிக்கோடு மாவட்டத்தின் வடகரா தாலுக்காவில் உள்ள 9 பஞ்சாயத்துகளில் உள்ள 58 வார்டுகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த பகுதிகளில் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதி வழங்கப்படும். ஆனால் மருந்தகங்கள் மற்றும் சுகாதார நிலையங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கப்படவில்லை.

பாதிக்கப்பட்ட நபர்களின் தொடர்புகளை முன்கூட்டியே கண்டறிவதிலும், அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்துவதிலும் மாநில நிர்வாகம் கவனம் செலுத்தி வருகிறது” என்று தெரிவித்தார்.

கட்டுப்பாட்டு மண்டலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளின் மாணவர்களும் வீட்டிலிருந்தே வகுப்புகளில் கலந்து கொள்ளும் வகையில் ஆன்லைன் வகுப்புகளை ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுக் கல்வி இயக்குநருக்கு கல்வித் துறை அமைச்சர் வி.சிவன்குட்டி உத்தரவிட்டுள்ளார்.

மோனிஷா

ஆவின் நெய், வெண்ணெய் விலை மீண்டும் உயர்வு!

19 தமிழக மீனவர்கள் கைது!

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *