பஞ்சாப்-ஹரியானா எல்லையில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்தில் பங்கேற்ற 70 வயதான விவசாயி ஒருவர் இன்று (பிப்ரவரி 16) மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். 70 year Farmer died at Delhi
பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) சட்டப்பூர்வ உத்தரவாதம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மத்திய அரசை வலியுறுத்தி டெல்லியை நோக்கி மாபெரும் பேரணியை கடந்த 13ஆம் தேதி விவசாயிகள் தொடங்கினர்.
இதில் பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றுள்ள நிலையில், டெல்லியில் இருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்பாலா அருகே சிங்கு மற்றும் திக்ரி எல்லையில் அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.
மேலும் முன்னேறி வரும் விவசாயிகளை ட்ரோன் மூலம் குறிவைத்து கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் ஹரியானா – டெல்லி எல்லையில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் போராட்டத்தின் மூன்றாவது நாளான இன்று சம்யுக்தா கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) உள்ளிட்ட பல்வேறு விவசாய சங்கங்கள், மத்திய அரசின் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.
இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய சாலைகளில் விவசாயிகள் இன்று போராடி வரும் நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியானாவில் கல்வி நிலையங்கள், வியாபாரிகள் மற்றும் ஓட்டுநர்களின் ஆதரவுடன் பந்த் தீவிரமாக நடந்து வருகிறது.
கண்ணீர் புகை குண்டு வீச்சு காரணமா?
இதற்கிடையே ஹரியானா எல்லையில் உள்ள சம்புவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் பங்கேற்ற பஞ்சாபின் குர்தாஸ்பூரைச் சேர்ந்த ஞான சிங் என்ற 70 வயது விவசாயி இன்று மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
காலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஞான சிங் திணறிய நிலையில், அவரை உடனடியாக ராஜ்புரா அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக பாட்டியாலாவில் உள்ள அரசு ராஜிந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு சுமார் 30 நிமிடங்கள் விவசாயியை காப்பாற்ற மருத்துவர்கள் போராடிய நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கடந்த இரண்டு நாட்களாக வீசப்பட்ட கண்ணீர் புகை குண்டுகளை வீசியதால் தான் விவசாயி ஞானசிங் உயிரிழந்தார் என்ற தகவல் வெளியான நிலையில், தலைநகரில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது இதனை கட்டுபடுத்த அங்கு போலீசார் மற்றும் துணை ராணுவ படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் நேற்று நள்ளிரவில் நடந்த விவசாயி பிரதிநிதிகள் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.
இதனையடுத்து நாளை மறுநாள் வரும் பிப்ரவரி 18 மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
வங்கி கணக்கு முடக்கம் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்: மல்லிகார்ஜூன கார்கே
”மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” : வானிலை மையம் எச்சரிக்கை