சீட்டா மறு அறிமுக திட்டத்தின் மூலம் ஆப்பிரிக்காவிலிருந்து 8 சிறுத்தைகள் இந்தியா வந்தடைந்தன.
ஆப்பிரிக்க நாட்டின் நமிபியாவிலிருந்து 8 சிறுத்தைகள் இன்று (செப்டம்பர் 17) போயிங் 717 சிறப்பு விமானம் மூலம் இந்தியா வந்தடைந்தன. இந்த சிறப்பு விமானத்தின் முகப்பு பக்கம் சிறுத்தை வடிவில் அமைக்கப்பட்டிருந்தது.
ஐந்து பெண் சிறுத்தைகள் மற்றும் மூன்று ஆண் சிறுத்தைகள் இந்தியாவிற்கு கொண்டுவரப்பட்டன. மத்திய பிரதேச மாநிலம் குவாலியருக்கு வந்திறங்கிய சிறுத்தைகள் குனோ தேசிய பூங்காவிற்கு ஹெலிகாப்டர் மூலமாக கொண்டு செல்லப்படுகிறது.
பிரதமர் மோடி தனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை 10.45 மணியளவில், குனோ தேசிய பூங்காவில் மூன்று சிறுத்தைகளை 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு அடைப்பில் விடுவிப்பார்.
இந்த நிகழ்ச்சியில், மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்கள் கலந்து கொள்கின்றனர்
உலகில் சீட்டா ரக சிறுத்தைகள் அழிந்து வரக்கூடிய சூழலில் இதன் எண்ணிக்கை 7000 மட்டுமே உள்ளதாக இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவின் கடைசி சீட்டா வகை சிறுத்தை 1948ஆம் ஆண்டு சத்தீஸ்கரில் உள்ள கோரியாவில் உயிரிழந்தது. இதைத்தொடர்ந்து இந்தியா முழுவதும் ஆய்வு செய்த பிறகு 1952ஆம் ஆண்டு சீட்டா வகை சிறுத்தைகள் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் 8 சிறுத்தைகள் கொண்டுவரப்பட்டுள்ளதால், 70 ஆண்டுகளுக்கு பிறகு சீட்டா வகை சிறுத்தைகள் இந்தியாவில் வளரவுள்ளது. இதனால் ட்விட்டரில் CheetahIsBack என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டிங்கில் இருக்கிறது.
செல்வம்
இலங்கை குண்டுவெடிப்பு: சிறிசேனாவுக்கு எதிராக அதிரடி தீர்ப்பு!