எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து சிறுவன் பலி!
மும்பையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து 7 வயது சிறுவன் பலியாகி இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாட்டில் சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒருபகுதியாக கொண்டு வரப்பட்டது தான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்.
மின்சாரத்தில் சார்ஜ் போட்டு இயக்கப்படும் இந்த வகையான ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டு ஓரளவு பயன்பாட்டுக்கு வந்திருக்கிறது.
ஆனால் இதனால் சில பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் அடிக்கடி தீப்பிடித்து எரிவதும், பேட்டரிகள் வெடிப்பதும் நிகழ்கின்றன.
அந்த வகையில் மும்பையில் 7 வயது சிறுவன், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்ததில் உயிரிழந்து இருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மும்பை புறநகரான வசாய் பகுதியைச் சேர்ந்தவர் சர்பாஸ் அன்சாரி.
ஞாயிறு இரவு சர்பாஸ் தனது வீட்டில் மகன் சபீர் அன்சாரி மற்றும் தாய் தூங்கிக் கொண்டிருந்த அறையில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரியை சார்ஜ் போட்டு இருக்கிறார்.
அதிகாலை 2.30 மணியளவில் சார்ஜ் போடப்பட்ட நிலையில், சுமார் 5.30 மணிக்கு சபீர் அறையில் பயங்கர சத்தம் கேட்டிருக்கிறது.
![](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/sdfghjkg-1.gif)
அங்கு சென்று பார்த்தபோது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து, வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உள்ளிட்ட பொருட்களும் உடைந்து சிதறியுள்ளன. இதில் சிறுவன் சபீருக்கு 80 சதவீதம் காயம் ஏற்பட்டறது. அவரது பாட்டி லேசான காயங்களுடன் தப்பினார்.
தீக்காயம் அடைந்த சிறுவன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் சபீர் பரிதாபமாக உயிரிழந்தார்.
![7 year old boy dies after electric scooter battery explodes](https://storage.googleapis.com/minnambalam_bucket/minnambalam.com/wp-content/uploads/1097914-fire.jpg)
பேட்டரியை நீண்ட நேரம் சார்ஜ் போட்டதால் அது வெடித்திருக்கக்கூடும் என்று எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
ஆனால் விற்பனையாளர்கள் கூறியபடி 4 முதல் 5 மணி நேரம் மட்டுமே சார்ஜ் போட்டதாக சிறுவனின் தந்தை கூறியுள்ளார்.
ஜெய்பூரை சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பாளர்கள் வெடித்த பேட்டரியை ஆய்வு செய்து வருகின்றனர்.
2022 ஆம் ஆண்டு முதலே மின்சார ஸ்கூட்டர் பேட்டரி தீ விபத்துகள் அடிக்கடி நடந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு, ஆந்திரப் பிரதேசத்தில் மின்சார இரு சக்கர வாகனத்தின் பேட்டரி வெடித்து, ஒருவர் உயிரிழந்தார், மூன்று பேர் காயமடைந்தனர்.
விஜயவாடாவில் நடந்த இந்த சம்பவத்தில் படுக்கையறையில் பேட்டரியை சார்ஜ் போட்டிருந்தபோது, அதிகாலையில் அனைவரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த சமயம் பேட்டரி திடீரென வெடித்து சிதறியது.
எனவே இதுபோன்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பேட்டரிகளை சார்ஜ் போடும்போது தனி இடத்தில் போடவேண்டும் என்று பலரும் இணையத்தில் அறிவுரை கூறி வருகின்றனர்.
கலை.ரா
புதுவை மின் ஊழியர்கள் மீது பாயும் எஸ்மா சட்டம்?
மணிரத்னத்துடன் இணையும் ரஜினிகாந்த்