பசிபிக் பெருங்கடலில் உள்ள தீவு நாடான பப்புவா நியு கினியா நாட்டில் இன்று காலை (செப்டம்பர் 11) 7.7 ரிக்டர் அளவில் மிகப்பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவின் அண்டை நாடாகவும், பசிபிக் பெருங்கடலில் சில லட்சம் மக்களுடன் குறைந்த மக்கள்தொகை கொண்ட தீவு நாடாகவும் உள்ளது பப்புவா நியு கினியா.
இந்நாட்டின் கைனேந்து நகரத்திற்கு கிழக்கே சுமார் 50 முதல் 60 கிலோமீட்டர் ஆழத்தில் இன்று காலை உள்ளூர் நேரப்படி 9.46 மணி அளவில் (இந்திய நேரப்படி காலை 5 மணி) 7.7 ரிக்டர் அளவில் மிகப்பெரும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) தெரிவித்துள்ளது.
நாட்டின் முக்கிய பகுதிகளில் ஏற்பட்டிருக்கும் இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் மற்றும் சாலைகளில் சேதம் ஏற்பட்டிருக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதுவரை நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள் பாதிப்புகள் குறித்து எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.
எனினும் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகள் நிகழ்ந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.

சுனாமி எச்சரிக்கை நீக்கம்!
நிலநடுக்கத்தை தொடர்ந்து பப்புவா நியூ கினியாவில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், சில மணி நேரத்திற்கு பிறகு அமெரிக்க சுனாமி எச்சரிக்கை அமைப்பு அதனை திரும்ப பெற்றது.
ஆண்டுக்கு 100 நிலநடுக்கம்!
பப்புவா நியூ கினியா பசிபிக்கின் “ரிங் ஆஃப் ஃபயர்” எனப்படும் பகுதியில் அமைந்துள்ளது. அதாவது ஆண்டுதோறும் அதிக நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாகும். ஆண்டுக்கு 100க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பப்புவா நியு கினியாவில் ஏற்படுகின்றன.
கடந்த 2018ம் ஆண்டு இங்கு ஏற்பட்ட 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் சுமார் 100க்கு மேற்பட்டோர் பலியானது குறிப்பிடத்தக்கது.
கிறிஸ்டோபர் ஜெமா