தைவானில் 7.4 ரிக்டர் நிலநடுக்கம்: கட்டிடங்கள் சரிந்தன… மூன்று நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
தைவான் நாட்டில் இன்று (ஏப்ரல் 3) காலை 7.4 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனையடுத்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் தலைநகரான தைப்பேவில் இன்று உள்ளூர் நேரப்படி காலை 8:00 மணிக்கு 7.4 ரிக்டர் அளவிலான பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது.
தைவானின் ஹுவாலியன் நகருக்கு தெற்கே 18 கிலோமீட்டர் (11 மைல்) தொலைவில் 34.8 கிமீ ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு (USGS) மையம் தெரிவித்துள்ளது.
https://twitter.com/MuhamadOmair83/status/1775347310987243812
இந்த நிலநடுக்கத்தினால் ஹுவாலியன் நகரில் பல கட்டிடங்கள் குலுங்கி சரிந்தன. பல்வேறு பகுதிகளிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. எனினும் இதுவரை உயிர்சேதம் ஏற்பட்டதாக அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
https://twitter.com/Santhoxh_/status/1775347553137233927
பரபரப்பான காலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் எதிரொலியாக மக்கள் அலறியடித்து, பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் காட்சிகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், ஒரு மணி நேரத்திற்கு பின்னர் மீண்டும் தொடங்கப்பட்டது.
https://twitter.com/YWNReporter/status/1775336266650861749
3 நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை!
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து மக்களுக்கு குறுஞ்செய்தி மூலம் சுனாமி எச்சரிக்கையை தைவான் வெளியிட்டது.
அதில் “கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் விழிப்புடன், கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் மற்றும் அலைகளின் திடீர் எழுச்சியால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து கவனம் செலுத்தவும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலநடுக்கம் உணரப்பட்டதும் ஜப்பானில் 15 நிமிடங்களுக்கு பின்னர் யோனகுனி கடலோரத்தில் 30 செ.மீ. உயரத்திற்கு அலைகள் எழும்பின.
https://twitter.com/shivanshu7253/status/1775347259976380742
மியாகோஜிமா தீவு உட்பட பிராந்தியத்தில் உள்ள தொலைதூர ஜப்பானிய தீவுகளுக்கு மூன்று மீட்டர் (10 அடி) உயரத்திற்கு சுனாமி அலைகள் கடலில் எழக்கூடும் என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்நாட்டின் ஒகினவா மாகாணத்தின் தெற்கே கடலோர பகுதிகளில் உள்ள மக்கள் வெளியேறுவதற்கான அறிவுறுத்தல்களும் வெளியிடப்பட்டு உள்ளன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒகினாவாவின் பிரதான விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டதாக போக்குவரத்து அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தைவானின் மேற்குப் பகுதியில் உள்ள பிலிப்பைன்ஸ் நாட்டிலும் சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளதுடன், கரையோரப் பகுதி மக்களை வெளியேறுமாறும் அழைப்பு விடுத்துள்ளது.
25 ஆண்டுகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
இதுகுறித்து தைபேயின் மத்திய வானிலை நிர்வாகத்தின் நில அதிர்வு மையத்தின் இயக்குனர் வூ சியென்-ஃபு கூறுகையில், “தைவானை கடந்த 25 ஆண்டுகளில் தாக்கிய மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் இது என்று கருதப்படுகிறது. நிலத்திற்கு அருகில் உள்ளது மற்றும் ஆழமற்றது.
மக்களை ஆபத்தான பகுதிகளில் இருந்து பாதுகாப்பான இடத்திற்கு செல்ல அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் தெரிவித்தார்.
தைவானில் செப்டம்பர் 1999 ஆம் ஆண்டு 7.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அத்தீவின் வரலாற்றில் மிக மோசமான அந்த இயற்கை பேரழிவில் சுமார் 2,400 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோன்று இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் நோட்டோ தீபகற்பத்தில் 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு அதில் 230 க்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
RCB vs LSG: சொந்த மண்ணில் தொடர் தோல்விகளை சந்திக்கும் பெங்களூரு
பியூட்டி டிப்ஸ்: வேனல் கட்டியிலிருந்து விடுதலை பெற…
ஹெல்த் டிப்ஸ்: கோடையில் எவ்வளவு தண்ணீர் குடிக்கலாம்?
டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!