காம்பியா நாட்டில் 66 குழந்தைகள் உயிரிழக்கக் காரணமாக இருந்ததாக இந்தியாவின் 4 இருமல் மருந்துகளுக்கு உலக சுகாதார நிறுவனம் தடைவிதித்திருக்கிறது.
மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவில் 66 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். பரிசோதனையில் குழந்தைகள் அனைவருக்குமே சிறுநீரக செயலிழப்பு இருந்தது தெரியவந்தது.
இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் மருந்துகளுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
“நச்சுத்தன்மை கொண்ட 4 இருமல் மருந்துகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காம்பியா நாட்டில் ஏற்பட்ட சிறுநீரக பாதிப்பு மற்றும் 66-க்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிரிழப்புக்கு இந்த மருந்துடனான தொடர்பு கண்டறியப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற மருந்து நிறுவனத்தால் இந்த 4 இருமல் மற்றும் சளி மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன.
இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது ”என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் என்ற நிறுவனம் தயாரிக்கும் ப்ரோமேதசைன் ஓரல் சல்யூஷன், கோஃபெக்ஸ்மாலின் பேபி காஃப் சிரப், மேக்காஃப் பேபி காஃப் சிரப் மற்றும் மேக்ரிப் என் கோல்டு சிரப் ஆகிய 4 மருந்துகளில் அதிகளவில் டை எத்தலீன் க்ளைக்கால் மற்றும் எத்திலீன் க்ளைக்கால் உள்ளது தெரியவந்துள்ளது.
இந்த மருந்துகளை ஆய்வுக்கு உட்படுத்தியபோது இந்த மருந்துகளில் உள்ள மூலப் பொருட்கள் மனித உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கக் கூடியவை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மருந்தை உட்கொள்ளும் குழந்தைகளுக்கு அடிவயிற்று வலி, வாந்தி, சிறுநீர் கழிப்பதில் சிக்கல், தலைவலி, மனநிலையில் குழப்பம், சிறுநீரக பாதிப்பு ஆகியன ஏற்படலாம் என்றும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மெய்டன் பார்மாசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தரமற்ற மருந்துகளையே காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்திருப்பதாக இந்திய அரசின் மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
மருந்துகளை சட்டவிரோத கள்ளச் சந்தை மூலம் காம்பியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதும் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் உயிரைப் பறிக்கும் இந்த 4 மருந்துகளும் உள்நாட்டு சந்தையிலும் புழக்கத்தில் விடப்பட்டிருக்கலாம்.
எனவே அதனை உடனடியாக தடை செய்யவேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கலை.ரா