ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட ஒன்றாம் வகுப்பு மாணவன்!

Published On:

| By Monisha

6 year old boy shoot his teacher

அமெரிக்காவில் 6 வயது சிறுவன் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் ரிச்நெக் மழலையர் பள்ளி செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் 1 ஆம் வகுப்பு பயின்று வரும் 6 வயது மாணவன் வகுப்பறைக்குள் வைத்து 30 வயதான ஆசிரியை ஒருவரைச் சரமாரியாகத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், துப்பாக்கியால் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த ஆசிரியையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

6 year old boy shoot his teacher

வகுப்பறையில் துப்பாக்கிச் சூடு நடத்திய 6 வயது மாணவனை போலீசார் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்துப் பேசிய காவல் துறை அதிகாரி ஸ்டீவ் ட்ரூ, ”துப்பாக்கிச் சூடு நடத்திய சிறுவனுக்கு 6 வயது தான் ஆகிறது. சிறுவன் தற்போது போலீஸ் கட்டுப்பாட்டில் இருக்கிறார்.

மேலும் இது தற்செயலாக நடந்த சம்பவம் கிடையாது. தெரிந்தே தான் ஆசிரியரைத் துப்பாக்கியால் சுட்டுள்ளார்.

சிறுவனுக்குத் துப்பாக்கி எப்படிக் கிடைத்தது என்று விசாரித்து வருகிறோம். சிறுவனின் பெற்றோரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவத்தால் வகுப்பில் இருந்த மாணவர்களுக்குக் காயம் எதுவும் ஏற்படவில்லை. அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஆசிரியர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்” என்று கூறினார்.

விர்ஜினியா மாகாண பள்ளிகள் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பார்கர், ”இந்த சம்பவம் மிகுந்த வேதனையையும் அதிர்ச்சியையும் அளிக்கிறது. இளைஞர்கள் கையில் துப்பாக்கி கிடைக்காததை நாம் உறுதி செய்ய வேண்டும்” என்று கூறியுள்ளார்.

6 year old boy shoot his teacher

ஒன்றாம் வகுப்பு படிக்கும் மாணவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூடத் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோனிஷா

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தற்கொலைக்கு முயன்ற 4 பேர் மீது வழக்கு!

“ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை” – ஓபிஎஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share