தஜிகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 23) அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கிழக்கு தஜிகிஸ்தானில் இன்று அதிகாலை 6.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 20.5 கிமீ ஆழத்தில் தஜிகிஸ்தான்-சின்ஜியாங் எல்லையில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 5.37 மணியளவில் (இந்திய நேரப்படி நள்ளிரவு 12.37) நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சீனா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் போன்ற நாடுகளில் உணரப்பட்டுள்ளது.
தஜிகிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டு 20 நிமிடங்கள் கழித்து ஆப்கானிஸ்தானில் ஃபைசாபாத்தில் இருந்து 265 கி.மீ தொலைவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
நிலப்பரப்பிலிருந்து பூமிக்கடியில் 113 கி.மீ ஆழத்தில் காலை 6.07 மணிக்கு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 ஆகப் பதிவாகியுள்ளது.
தொடர்ந்து 2வது முறையாக காலை 6.25 மணிக்கு மீண்டும் ஃபைசாபாத்தில் இருந்து 259 கி.மீ தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நிலப்பரப்பிலிருந்து பூமிக்கடியில் 150 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5 புள்ளிகளாகப் பதிவாகியுள்ளது.
3வது முறையாக 5.2 ரிக்டர் அளவில் காலை 7.05 மணிக்கு 279 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்திலும் 4வது முறையாக 7.37 மணிக்கு 4.8 ரிக்டர் அளவில் 299 கி.மீ தொலைவில் 10 கி.மீ ஆழத்தில் நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக அடுத்தடுத்து 6 தடவை ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பெரிய கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
இதற்கு முன்னதாக நள்ளிரவு 2.25 மணிக்கு அருணாச்சல பிரதேசத்தில் 3.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாதம் 6 ஆம் தேதி துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட 7.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் இரு நாடுகளையும் உலுக்கியது.
கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிப் பலியானவர்கள் எண்ணிக்கை 47 ஆயிரத்தைக் கடந்த நிலையிலும் மீட்புப் பணிகள் நிறைவடையாமல் நீடித்து வருகிறது.
இந்நிலையில் ஆசிய கண்டத்தின் பல்வேறு பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படுவது மக்களிடத்தில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
டாப் 25 பட்டியலில் இருந்து வெளியேறிய அதானி குழுமம்: காரணம் என்ன?
100 மோடி வந்தாலும் 2024ல் வாய்ப்பில்லை : மல்லிகார்ஜுன கார்கே