இந்தியாவில் 5ஜி அலைக்கற்றைக்கான ஏலம் இன்று ( ஜூலை 26 ) காலை 10 மணிக்கு தொடங்கியது.
நாட்டில் 5ஜி நெட்வொர்க் சேவையை தொடங்குவதற்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஜூன் 15 அன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து இன்று ஏலம் நடைபெறுகிறது. இந்த ஏலத்தில் கவுதம் அதானி தலைமையிலான அதானி டேட்டா நெட்வொர்க்ஸ், ரிலையன்ஸ் ஜியோ, பார்தி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஐடியா ஆகிய நான்கு நிறுவனங்கள் மோதுகின்றன.
இந்த 4 நிறுவனங்களும் தங்களது முன்வைப்பு தொகையை ஏற்கனவே செலுத்தியுள்ளன. அதிகபட்ச தொகையாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 14 ஆயிரம் கோடி ரூபாய் செலுத்தியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம் ரூ.5.500 கோடியும், வோடஃபோன் ஐடியா ரூ.2200 கோடியும், அதானி குழுமம் ரூ. 100 கோடியும் செலுத்தியுள்ளன. இதில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் செலுத்தியுள்ள முன்வைப்பு தொகை அதானி டேட்டா நெட்வொர்க்கை விட 140 மடங்கு, வோடபோன் ஐடியாவை விட 6.3 மடங்கு மற்றும் ஏர்டெல்லை விட 2.5 மடங்கு அதிகமாகும்.

5ஜி அலைகற்றை ஏலத்தில் 600 மெகா ஹெட்ஸ் தொடங்கி 700, 800, 900, 1800, 2100, 2300, 2500, 3300 மெகா ஹெட்ஸ் வரை மற்றும் 26 ஜிகாஹெட்ஸ் ஆகியவை ஏலம் விடப்பட உள்ளன.
இந்த 5ஜி அலைக்கற்றை ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனம் அடுத்த 20 ஆண்டுகளுக்கு அலைக்கற்றையை பயன்படுத்துவார்கள். ஏலத்தில் வெற்றி பெறும் நிறுவனங்கள், ஏலத்தின் தொகையை 20 தவணைகளாகப் பிரித்துச் செலுத்தலாம். ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அட்வான்ஸ் செலுத்த வேண்டும்.
இந்த 5ஜி ஏலம் மூலம் அரசுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதல் 1 லட்சம் கோடி ரூபாய் வரை கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5ஜி சேவை பயன்பாட்டிற்கு வந்தால் அது 4ஜி சேவையை விட 10 மடங்கு வேகமாக செயல்படும். ஆனால் இதற்கான ரீசார்ஜ் திட்டங்கள் மலிவானதாக இருக்க வாய்ப்புகள் குறைவுதான்.
மோனிஷா