ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் பெய்ருட்டில் மருத்துவமனைக்கு அடியில் ஏற்படுத்தியுள்ள பங்கரில் 4 ஆயிரம் கோடி மதிப்புள்ள தங்கத்தை சேகரித்து வைத்திருப்பதாக இஸ்ரேல் ராணுவம் செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் ராணுவம் சமீபத்தில் ஹிஸ்புல்லா தலைவர் ஹசன் நஸ்ரல்லாவை வெடிகுண்டு வீசி கொலை செய்தது. கிட்டத்தட்ட 80 டன் வெடிகுண்டுகளை அவர் தங்கியிருந்த பங்கர் மீது வீசி இஸ்ரேல் கொலை செய்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், கொல்லப்பட்ட ஹசன் நஸ்ரல்லா உத்தரவின் பேரில் 4 ஆயிரம் கோடி மதிப்பு கொண்ட தங்கம் பெய்ரூட்டிலுள்ள மருத்துவமனைக்கு அடியில் பங்கரில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
இது குறித்து , இஸ்ரேல் பாதுகாப்புத்துறை செய்தி தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹாகாரி கூறுகையில், “பெய்ரூட் மருத்துவமனைக்கு அடியில் கொட்டி வைக்கப்பட்டிருக்கும் தங்கத்தை எடுத்து லெபனான் ஆட்சியாளர்கள் அந்த நாட்டின் உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும். நாங்கள் அதை டார்கெட் செய்து அழிக்கப் போவதில்லை. ஆனால், எங்களை தாக்க அந்த தங்கத்தையோ பணத்தையோ ஹிஸ்புல்லா அமைப்பு பயன்படுத்த அனுமதிக்க வேண்டாம்.
ஹிஸ்புல்லா, ஹமாஸ் அமைப்புகள் மருத்துவமனை, பள்ளிக்கூடங்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கின்றன. ஈரானும் லெபனான் மக்களும்தான் ஹிஸ்புல்லா அமைப்புக்கு பணம் கிடைக்கவும், அவர்களின் தங்கக் கடத்தலுக்கும் உதவிகரமாக இருக்கின்றனர்.
லெபனான், சிரியா, துருக்கி, ஈரான் நாடுகளில் தொழிற்சாலைகளை ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்தி வருகின்றனர். அதன் வழியாகவும் அவர்களுக்கு பணம் கிடைக்கிறது. லெபனான் மக்களுக்கு எதிராக நாங்கள் போரிடவில்லை. ஈரான் பின்னணியில் இருக்கும் ஹிஸ்புல்லா அமைப்பை எதிர்த்துதான் போராடுகிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
–எம்.குமரேசன்
நாமக்கல்லில் கலைஞர் சிலையை திறந்து வைத்த ஸ்டாலின்
தீபாவளிக்கு செம்ம ஆஃபர்… அமுதம் அங்காடியில் 15 மளிகை பொருட்கள் விற்பனை!