மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று (பிப்ரவரி 11) ஹைதராபாத்தில் நடைபெற்ற சர்தார் வல்லபாய் படேல் தேசிய போலீஸ் அகாடமியின் 74 ஆவது, ஆர்ஆர் ஐபிஎஸ் தொகுதி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் அமித் ஷா, “ஐபிஎஸ்ஸின் சிறந்த பாரம்பரியத்தில் இணைகிறீர்கள். பயிற்சியின் பின்னர் இந்தத் தகுதியானது நாட்டிற்கு முன் எழக்கூடிய ஒவ்வொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன், அர்ப்பணிப்பு கொண்டது. நமது 75 ஆண்டுகால சுதந்திரத்தின் உச்சக்கட்டத்தையொட்டி, நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பைக் காக்க இந்த அணி களமிறங்குவது பெருமைக்குரியது.
கடந்த ஏழு தசாப்தங்களில், நாடு பாதுகாப்புத் துறையில் பல ஏற்ற தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல சவால்களை எதிர்கொண்டது. இந்த சவால்களை எதிர்கொள்ளும் போது, 36,000 க்கும் மேற்பட்ட போலீசார் உச்சபட்ச தியாகங்களைச் செய்துள்ளனர்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, அகில இந்திய சேவைகள் (ஐபிஎஸ், ஐஏஎஸ், ஐஆர்எஸ்) தொடங்கும் போது, முதல் உள்துறை அமைச்சர் சர்தார் படேல், ஒரு கூட்டாட்சி அரசியலமைப்பின் கீழ் இந்தியாவை சிதையாமல் வைத்திருப்பது அகில இந்திய சேவைகளின் பொறுப்பு என்று கூறினார். பயிற்சி பெறுபவர்கள் இந்த வாக்கியத்தை தங்கள் குறிக்கோளாக மாற்ற வேண்டும். இக்கல்லூரியை நிறுவும் போது, சர்தார் வல்லபாய் படேல், இந்தியாவிலேயே முதன்முறையாக இந்தக் கல்லூரி இருப்பதாகவும், கடந்த காலத்தில் இதுபோன்ற முன்னுதாரணங்கள் இல்லை என்றும், ஆனால் இது வருங்கால சந்ததியினருக்கு ஊக்கமளிக்கும் முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறியதையும் இங்கே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்” என்று தெரிவித்தார் அமித் ஷா.
தொடர்ந்து பேசிய உள்துறை அமைச்சர், “நமது அரசியலமைப்பில் மூன்று வகையான முறைமைகள் இன்றியமையாதவை. முதலாவது குடிமக்கள், இரண்டாவது ஐந்து ஆண்டுகளுக்கு குடிமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. மூன்றாவது 30 முதல் 35 ஆண்டுகள் வரை சேவை செய்யும் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரத்துவம்.
குடிமகனுக்கு ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வாக்களிக்கும் உரிமை உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஐந்தாண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்துவிட்டு, பின்னர் மக்களிடம் ஆணையைப் பெறச் செல்ல வேண்டும், ஆனால் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் நீங்களோ 30-35 ஆண்டுகள் தன்னலமின்றி நாட்டிற்கு சேவை செய்ய உரிமை உண்டு. அடுத்த 25 ஆண்டுகளில், இந்த ஐபிஎஸ் குழு நாட்டின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பொறுப்பேற்கப் போகிறது. மேலும் இந்த பொறுப்பின் அறிவாற்றல் இந்த அதிகாரிகளின் மனம், கடமை மற்றும் பொறுப்புணர்வை எப்போதும் பிரதிபலிக்க வேண்டும்” என்றார் அமித் ஷா.
பயிற்சி நிறைவு அணிவகுப்பில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், அகாடமியின் இயக்குநர் ஏ.எஸ்.ராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
–வேந்தன்
பார்டர் பரோட்டா கடையில் கெட்டுபோன சிக்கன்? – மறுக்கும் உரிமையாளர்
தவறான சிகிச்சை : இலங்கை பெண்ணுக்கு ரூ.40 லட்சம் வழங்க உத்தரவு