கேரளாவில் கார் மீது பஸ் மோதியதில் 5 எம்.பி.பி.எஸ் மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்து போனார்கள்.
கேரள மாநிலம் ஆழப்புழாவில் கார் ஒன்றில் 11 மாணவர்கள் சென்றனர். ஒரே காரில் 11 பேர் பயணித்ததால் ஓவர்லோடாக இருந்துள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு 9.30 மணியளவில் செங்கனாச்சேரி அருகே இந்த கார் மிக வேகமாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த கே.எஸ்.ஆர்.டி.சி பேருந்து மீது மோதியது. இதில், கார் நொறுங்கியதுடன் பேருந்துக்குள்ளும் புகுந்து கொண்டது. உடனே , அருகே இருந்தவர்கள் காரை வெளியே இழுத்து உள்ளே இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தில் தேவநந்தன் , ஸ்ரீதேல் வல்சன், ஆயுஷ் ஷாஜி, முகமது இப்ராஹிம், முகமது அப்துல் ஜாப்பர் ஆகிய 5 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இவர்களில், முகமது இப்ராஹிம் லட்சத்தீவை சேர்ந்தவர். காயமடைந்த மீதி 6 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பேருந்தில் இருந்த 15 பயணிகளும் காயமடைந்தனர். விபத்தில் இறந்த மாணவர்கள் வந்தனம் என்ற இடத்திலுள்ள டி.டி மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ் முதலாம் ஆண்டு படித்து வந்தனர். அனைவருக்கும் 19 வயதுதான் ஆகிறது. ஒன்றரை மாதங்களுக்கு முன்புதான், இவர்கள் டாக்டர் படிப்பில் சேர்ந்துள்ளனர். கார் அதிவேகமாக வந்ததே விபத்துக்கு காரணமென்று பேருந்தின் கண்டக்டர் கூறியுள்ளார்.
விபத்தில் சிக்கிய காரை ஆய்வு செய்த மோட்டார் போக்குவரத்துத்துறை அதிகாரிகள், பழமையான கார் என்றும் அதிலும் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள் பயணித்தது விபத்துக்கு காரணமென்று கூறுகிறார்கள்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
-எம்.குமரேசன்