தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 5 வாக்குறுதிகள் நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. முதல்வராக சித்தராமையாவும் துணை முதல்வராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்றனர்.
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மாநிலம் முழுவதும் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம், குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 10 கிலோ அரிசி இலவசம், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 2,000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.3,000 மற்றும் டிப்ளமோ படித்தவர்களுக்கு ரூ.1,500 வழங்கப்படும் என 5 முக்கிய வாக்குறுதிகளை அறிவித்தது.
இந்நிலையில் இன்று (ஜூன் 2) கர்நாடக அமைச்சரவை கூட்டம் கூடியது. அந்த கூட்டத்தில் 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டன.
இது குறித்து, “இன்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 5 வாக்குறுதிகள் குறித்து முழுமையாக விவாதித்தோம். இந்த 5 வாக்குறுதிகளையும் நடப்பு நிதியாண்டில் செயல்படுத்த முடிவு செய்துள்ளோம்.
இதில் ஜூலை 1 முதல் 200 யூனிட் இலவச மின்சார திட்டமும் குடும்ப அட்டைதாரருக்கு 10 கிலோ இலவச அரிசி ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஆகஸ்ட் 15 முதல் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.2,000 உதவித் தொகை திட்டம் செயல்படுத்தப்படும்.
மாநிலத்திற்குள் மகளிருக்கான இலவச பேருந்து பயணம் ஜூன் 11 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வர உள்ளது” என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
மோனிஷா
கோடை விடுமுறை நிறைவு: 2,200 சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு!
கோகுல்ராஜ் ஆணவக் கொலை: யுவராஜ் தண்டனையை உறுதிசெய்த உயர்நீதிமன்றம்!