கடந்த மூன்று ஆண்டுகளில் மத்திய ஆயுதப் படையைச் சேர்ந்த 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர் என நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
நாட்டில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எல்லை பாதுகாப்பு பணியில் மத்திய ஆயுத போலீஸ் படையைச் சேர்ந்த வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
எனினும், பணியின்போது அவர்கள் தற்கொலை செய்வது அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் நாடாளுமன்றத்தின் மேலவையில் பாஜக எம்.பி. சோனல் மான்சிங், மத்திய பாதுகாப்பு படையில் தற்கொலைகள் அதிகரித்து உள்ளன என தெரிவித்து, அதுபற்றிய விவரங்களை அரசு வெளியிட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இதற்கு ஒன்றிய உள்விவகாரத் துறை இணை அமைச்சர் நித்யானந்த ராய் அளித்த எழுத்துபூர்வ முறையிலான பதிலில்,
‘2020-2022 வரையிலான மூன்று ஆண்டுகளில் மத்திய ஆயுத போலீஸ் படை, அசாம் ரைபிள்ஸ் மற்றும் தேசிய காவல் படை என மொத்தம் 436 பேர் தற்கொலை செய்து கொண்டனர்’ என தெரிவித்துள்ளார்.
இவற்றில் 2020ஆம் ஆண்டில் 144 பேரும், 2021ஆம் ஆண்டில் 157 பேரும், 2022ஆம் ஆண்டில் 135 பேரும் தற்கொலை செய்துள்ளனர். இதில், அதிக அளவாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களில் 154 பேர் அடங்குவர்.
இதன்படி அவர்களில், 2020ஆம் ஆண்டில் 54 பேரும், 2021ஆம் ஆண்டில் 57 பேரும், 2022ஆம் ஆண்டில் 43 பேரும் தற்கொலை செய்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து, எல்லை பாதுகாப்பு படை (பி.எஸ்.எஃப்.) வீரர்கள் மொத்தம் 111 பேர் தற்கொலை செய்துள்ளனர்.
அவர்களில் 2020ஆம் ஆண்டில் 30 பேரும், 2021ஆம் ஆண்டில் 44 பேரும், 2022ஆம் ஆண்டில் 37 பேரும் தற்கொலை செய்து உள்ளனர் என தெரிகிறது.
இந்தத் தற்கொலைகளை தடுக்கவும், கண்டறியவும், தீர்வுக்கான நடவடிக்கைகளை எடுக்கவும் அதிரடி படை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என இணை அமைச்சர் தெரிவித்துள்ளார். அதுபற்றிய அறிக்கை தயாராகி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையில், ” காவலர்களின் மன அழுத்தத்துக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இடைவிடாத பணிச்சுமை, ஓய்வில்லாமல் இருத்தல், இரவு பகல் பாராமல் கூப்பிட்ட நேரத்துக்குச் செல்வது என கடுமையாகப் பணிபுரிகின்றனர். இதனால், பலரால் குடும்பத்தை சரிவர கவனிக்க முடிவதில்லை.
சிலருக்கு குடும்பத்தில் சிரமங்கள் இருக்கும். பிள்ளைகளைப் படிக்க வைப்பதற்காக கடன் வாங்கிவிட்டு அதைச் செலுத்த முடியாமல் சிலர் தவிக்கின்றனர்.
காவல்துறையில் நல்ல பெயரை எடுத்தவர்கள்கூட இதுபோன்ற துன்பங்களைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவசர முடிவுகளை எடுக்கிறார்கள். அவர்கள் கையில் வடிகாலாக ஆயுதங்கள் இருப்பதால் எளிதில் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்படுகின்றனர்.
காவல்துறையில் பணியாற்றுகிறவர்களுக்கு வாரம் ஒருமுறை விடுப்பு என்பது எப்போதுமே இருக்கிறது. ஆனால், அதை சரிவர வழங்குவதில் சிக்கல்கள் உள்ளன.
எப்போது பிரச்சினை வரும் எனத் தெரியாது. சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்துவிட்டால், காவல் நிலையமே பரபரப்பில் இருக்கும். அப்போது விடுப்பு கேட்கும் எண்ணம் தோன்றாது.
வேலை இருந்தால்தான் சம்பளம் என்ற நிலையும் இந்தத் துறையில் இல்லை. 24 மணிநேரமும் வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் வந்தால், அடுத்த நாள் ஓய்வெடுக்கச் சென்றுவிட வேண்டும். காவலர்களுக்கு அவ்வப்போது அதிகாரிகளும் ஓய்வு கொடுக்க வேண்டும். அப்போதுதான் இதுபோன்ற சம்பவங்களைத் தவிர்க்க முடியும்” என்கிறார்கள் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரிகள்.
ராஜ்
முதல்வருடன் நிதியமைச்சர் சந்திப்பு!
ஆஸ்கர் வென்ற ரகுவின் உயிரை காப்பாற்றிய சிவகார்த்திகேயன்!
