சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களும் இந்திய விமானப்படை விமானம் மூலமாக அழைத்து செல்லப்பட்டு ரிஷிகேஷ் எய்ம்ஸ் மருத்துவமனையில் இன்று (நவம்பர் 29) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி சுரங்கப்பாதையில் நவம்பர் 12ஆம் தேதி அன்று சிக்கிய 41 தொழிலாளர்களும் கடந்த 17 நாட்களுக்கு பிறகு நேற்று இரவு பத்திரமாக மீட்கப்பட்டனர்.
மீட்கப்பட்ட தொழிலாளர்களின் மனஉறுதியையும், மீட்பு பணியில் ஈடுபட்ட வீரர்கள் மற்றும் எலி துளை சுரங்க நிபுணர்களின் துணிச்சலையும் குறித்து பிரதமர் மோடி, குடியரசுத்தலைவர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
சுரங்கத்தில் மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் அருகே இருந்த சின்யாலிசூர் சமூக சுகாதார மையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அவர்கள் ஒவ்வொருவரையும் உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார். மேலும் மீட்கப்பட்ட ஒவ்வொரு தொழிலாளிக்கும் தலா ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் தாமி, ”சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க உதவிய மீட்புப் பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.50,000 வழங்கப்படும்” என்று அறிவித்துள்ளார்.
மேலும் “மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவரையும் நான் சந்தித்தேன், அனைவரும் தற்போது ஆரோக்கியமாக உள்ளனர், அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்ச்சியாக உள்ளனர். அவர்கள் முழுமையாக பரிசோதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு உடல்நலப் பிரச்சனை எதுவும் இல்லை,” என்று தாமி கூறினார்.
தற்போது 41 தொழிலாளர்கள் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்தபோதிலும், நெறிமுறையின்படி ரிஷிகேஷில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகத்திற்கு (எய்ம்ஸ்) மருத்துமனைக்கு விமானம் மூலம் அவர்கள் அனுப்பப்படுவார்கள் என்று உத்தரகாசி தலைமை மருத்துவ அதிகாரி ஆர்.சி.எஸ் பன்வார் கூறியிருந்தார்.
#WATCH | Uttarkashi tunnel rescue | IAF's transport aircraft Chinook, carrying 41 rescued workers, leaves from Chinyalisaur. It is being flown to AIIMS Rishikesh for the workers' further medical examination. #Uttarakhand pic.twitter.com/2bpCW4ks1T
— ANI (@ANI) November 29, 2023
அதன்படி இந்திய விமானப்படையின் (IAF) போக்குவரத்து விமானமான சினூக் மூலம் மீட்கப்பட்ட 41 தொழிலாளர்களை சின்யாலிசூரில் இருந்து ரிஷிகேஷுக்கு அழைத்துச் செல்லப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
சென்னைக்கு ஆரஞ்சு அலர்ட்: தமிழகத்தில் 6 நாட்களுக்கு கனமழை!
திமுக அமைச்சர்களுக்கு எதிரான சொத்து குவிப்பு வழக்கு தள்ளுபடி: உச்சநீதிமன்றம்