இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கே – பிரதமர் மோடி இடையே UPI பரிவர்த்தனை, காங்கேசன் துறைமுகம் உள்பட 4 ஒப்பந்தங்கள் இன்று (ஜூலை 21) கையெழுத்தாகி உள்ளன.
இலங்கை அதிபராக பதவி ஏற்றபிறகு முதன்முறையாக ரணில் விக்ரமசிங்கே இரண்டு நாள் பயணமாக இந்தியாவிற்கு வருகை தந்துள்ளார். நேற்று டெல்லி வந்த அவரை மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சர் வீ. முரளீதரன் வரவேற்றார்.
இதனையடுத்து டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் இன்று பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோருடன் ரணில் விக்ரமசிங்கே பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது, UPI பரிவர்த்தனையை இலங்கையில் அனுமதிக்க அந்நாட்டு அரசுடன் ஒப்பந்தம், நாகை – இலங்கை காங்கேசன்துறை இடையே பயணிகள் படகு போக்குவரத்து, இந்தியா-இலங்கை இடையே பெட்ரோலியக் குழாய் பதிப்பு உள்பட 4 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.
இந்திய மக்களுக்கு நன்றி!
பேச்சுவார்த்தைக்கு பின்னர் நடைபெற்ற கூட்டு செய்தியாளர் சந்திப்பில் ரணில் விக்ரமசிங்கே பேசுகையில், “சமீபத்திய பொருளாதார நெருக்கடியின் போது இந்தியா சுமார் 4 பில்லியன் டாலர் நிதிஉதவியை இலங்கைக்கு வழங்கியது. மிகவும் சவாலான இந்த காலகட்டத்தில் அளித்த ஆதரவுக்காக நான் பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்,
இந்தியாவின் தென் பகுதியில் இருந்து இலங்கைக்கு பெட்ரோலியக் குழாய் அமைப்பதன் மூலம் மலிவான விலையில் ஆற்றல் வளங்களை வழங்க முடியும்” என்று விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
சமத்துவம், நீதி மற்றும் அமைதி!
பிரதமர் மோடி பேசும்போது, “இலங்கை மக்கள் கடந்த ஆண்டு பல சவால்களை எதிர்கொண்டனர். ஆனால் ஒரு நெருங்கிய நண்பரைப் போல இந்தியா அந்த நெருக்கடியான நேரத்தில் இலங்கை மக்களுடன் தோளோடு தோளாக நின்றது.
இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்களும், வளர்ச்சியும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்துள்ளது. இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது அவசியம்.
இலங்கை அரசாங்கம் தமிழர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி சமத்துவம், நீதி மற்றும் அமைதிக்கான செயல்முறையை முன்னெடுத்துச் செல்லும் என்று நம்புகிறோம்” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
கிறிஸ்டோபர் ஜெமா
ராகுல்காந்தி வழக்கு: விலகுவதாக அறிவித்த உச்சநீதிமன்ற நீதிபதி!
செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீடு: ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு!