ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் விண்வெளி ஏவுதளத்தில் தற்கொலை செய்து கொண்ட கணவர் உடலை பார்க்க வந்த மனைவியும் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டம் ஸ்ரீஹரிகோட்டாவில் திங்கட்கிழமை காலை ரேடார் பிரிவில் துணை இராணுவ வீரராக இருந்த சிந்தாமணி என்பவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த சிந்தாமணி 2021 ஆம் ஆண்டு மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையில் காவலராக தேர்வு செய்யப்பட்டு ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ராடார் பிரிவில் சேர்ந்தார்.
பல மாதங்கள் நீண்ட விடுப்புக்கு பின், இம்மாதம் 10ம் தேதி பணிக்கு திரும்பினார். 15ம் தேதி இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அவர் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
இந்த சம்பவம் நடந்த 24 மணி நேரத்திற்குள் ஸ்ரீஹரிகோட்டா முதல் நுழைவு வாயிலில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் சி-ஷிப்டில் பணியில் இருந்த உத்தரபிரதேசத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் விகாஸ் சிங், தனது கைத்துப்பாக்கியால் தலையில் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்நிலையில் விகாஸ் சிங் தற்கொலை செய்து கொண்ட தகவல் அறிந்த அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் நேற்று இரவு ஸ்ரீஹரிகோட்டாவிற்கு வந்தனர்.
கணவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் மனம் உடைந்து இருந்த விகாஸ் சிங் மனைவி பிரியா சிங் கணவரின் உடலைப் பார்த்ததும் அழுது துடித்தார்.
அவரது குடும்பத்தினர் அவருக்கு ஆறுதல் கூறி வந்த நிலையில் ஸ்ரீஹரிக்கோட்டாவில் உள்ள ஷார் நகரில் உள்ள நர்மதா விருந்தினர் மாளிகையில் இரவு தங்க வைக்கப்பட்டிருந்தார்.
இந்த நிலையில் பிரியா சிங் அந்த அறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தாய், தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதால் அவர்களின் இரண்டு குழந்தைகள் அனாதையாகி உள்ளனர்.
பிரியா சிங் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. அடுத்தடுத்து ஸ்ரீஹரிகோட்டாவில் நடந்த தொடர் தற்கொலை சம்பவம் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
கலை.ரா
ராமஜெயம் கொலை: ரவுடிகளிடம் உண்மை கண்டறியும் சோதனை!
உதவ வந்தபோது விபத்து: பெண் தலைமை காவலர் பலி!