சத்தீஸ்கரில் பாதுகாப்புப் படையினர் நடத்திய என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் எண்ணிக்கை 31 ஆக இன்று (அக்டோபர் 5) உயர்ந்துள்ளது.
இந்தியாவில் மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களாக சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா உள்ளிட்டவை உள்ளன.
இந்த மாநிலங்களில் மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினர் தொடர் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஒடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் நாராயண்பூர்- தண்டேவாடா மாவட்டங்களின் எல்லையில் உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் திடீரென அதிகரித்துள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது.
இதனையடுத்து நெந்தூர் மற்றும் துல்துலி கிராமங்களுக்கு இடையே உள்ள அபுஜ்மாத் வனப்பகுதியில் அதிரடி படையினரும், போலீசாரும் நேற்று நள்ளிரவு 1 மணியளவில் தேடுதல் பணியில் ஈடுபட்டிருக்கின்றனர். அப்போது போலீசார் மீது மாவோயிஸ்டுகள் திடீரென துப்பாக்கியால் சுட தொடங்கியுள்ளனர்.
இதையடுத்து பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இரு தரப்பினருக்கும் பல மணிநேரமாக நடந்த இந்த தாக்குதலில் 28 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டிருக்கின்றனர்.
இந்த தாக்குதல் குறித்து தண்டவோடா எஸ்.பி கவுரவ் ராய் கூறுகையில், ‘‘வனப்பகுதிக்குள் மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்தது. வனப்பகுதிக்குள் பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுப்பட்டனர். இதனையறிந்த மாவோயிஸ்டுகள் துப்பாக்கியால் சுடத் தொடங்கினர். இதையடுத்து தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. தேடுதல் நடவடிக்கை முடிந்த பிறகு, என்கவுன்ட்டர் குறித்த முழுமையான தகவல்கள் வெளியிடப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
3 உடல்கள் கிடைத்தது!
தொடர்ந்து சுட்டுக்கொல்லப்பட்ட மாவோயிஸ்டுகளின் உடல்களை மீட்கும் பணியில் போலீசார் ஈடுப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் சத்தீஸ்கரின் பஸ்தார் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டில் இன்று காலை மேலும் 3 நக்சலைட்டுகளின் உடல்கள் மீட்கப்பட்டதாகவும், ஒரு ஏகே-47 துப்பாக்கி, ஒரு எஸ்எல்ஆர் துப்பாக்கி), ஒரு ஐஎன்எஸ்ஏஎஸ் துப்பாக்கி, ஒரு எல்எம்ஜி ரைபிள் மற்றும் ஒன்று உள்ளிட்ட ஆயுதங்களின் கிடைத்துள்ளதாகவும் பஸ்தார் சரக காவல் கண்காணிப்பாளர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் உயிரிழந்த நக்சலைட்டுகளின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் 24 ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலம் உருவாக்கப்பட்டதில் இருந்து ஒரே ஆபரேஷனில் மாவோயிஸ்டுகள் அதிகளவில் கொல்லப்பட்டது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
விபத்தில் சிக்கி முன்னாள் அதிமுக அமைச்சர் காயம்!
சிறையில் நடிகர் தர்ஷனை பயமுறுத்தும் ரேணுகாசாமி… திடீரென்று அலறல்!