3 மாநில தேர்தலுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்ய காங்கிரஸ் தேர்தல் குழு கூட்டம் 25ம் தேதி கூடுகிறது.
நாகலாந்து மாநிலத்தில் மார்ச் 12 ஆம் தேதியுடனும், மேகாலாயா மாநிலத்தில் மார்ச் 15 ஆம் தேதியுடனும், திரிபுரா மாநிலத்தில் மார்ச் 22 ஆம் தேதியுடனும் சட்டசபை பதவி காலம் முடிவடைகிறது.
எனவே நாகாலந்து,திரிபுரா,மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. திரிபுரா மாநிலத்தில் பிப்ரவரி 16 ஆம் தேதியும் மேகாலயா மற்றும் நாகலாந்தில் பிப்ரவரி 27 ஆம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
நாகலாந்து மாநிலத்தில் பா.ஜனதா-நாகா மக்கள் முன்னணியின் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. மேகாலயாவில் பாரதிய ஜனதா-தேசிய மக்கள் கட்சி கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.
திரிபுரா மாநிலத்தில் பாரதிய ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. எனவே இங்கு மீண்டும் ஆட்சி அமைப்பதில் பாஜகவும், ஆட்சியைப் பிடிப்பதில் காங்கிரசும் மும்முரமாக இறங்கியுள்ளன.
அந்த மாநிலங்களில் யாருக்கு செல்வாக்கு அதிகம் என்பதை கணக்கிட்டு தேசிய மற்றும் மாநில கட்சிகள், வேட்பாளர் தேர்வை தொடங்கியுள்ளன.
இந்தநிலையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தேர்தல் குழு கூட்டம் ஜனவரி 25ம் தேதி நடைபெறுகிறது.
இதில் திரிபுரா , மேகாலயா மற்றும் நாகலாந்து உள்ளிட்ட 3 மாநில சட்டமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ள காங்கிரஸ் வேட்பாளர்களின் பெயர்கள் இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடைபெற்று முடிந்த இமாச்சல் பிரதேச தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், 3 மாநில தேர்தல் மீதும் காங்கிரஸ் தனி கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.
கலை.ரா