மத்திய அரசு கொண்டு வந்த 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நாடு முழுவதும் இன்று (ஜூலை 1) அமலாகி உள்ளது.
இந்தியாவில் ஆங்கிலேயர்கள் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப்பட்ட இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி), குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி), இந்திய சாட்சியங்கள் சட்டம் (ஐஇசி) ஆகியன நடைமுறையில் உள்ளன.
இந்த சட்டங்களுக்கு மாற்றாக தற்போது பாரதிய நியாய சன்ஹிதா (பிஎன்எஸ்), பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பிஎன்எஸ்எஸ்), பாரதிய சாட்சிய அதினியம் ஆகிய 3 புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்ததுள்ளது.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றக் கூட்டத்தொடரின் போது மத்திய அரசு இந்த 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாவையும் தாக்கல் செய்தது. அப்போதே இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதும், இந்த சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
இதையடுத்து, 3 புதிய குற்றவியல் சட்ட மசோதாக்களுக்கும் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, இது சட்ட வடிவமானது. இதனால், 3 புதிய குற்றவியல் சட்டங்களும் இந்தியாவில் இன்று (ஜூலை 1) முதல் நடைமுறைக்கு வந்துள்ளன.
3 புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து நாடு முழுவதும் உள்ள காவல்துறை அதிகாரிகள், நீதித்துறை அதிகாரிகள், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் 40 லட்சம் தன்னார்வலர்களுக்கு மத்திய சட்ட அமைச்சகம் சார்பில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
புதிய குற்றவியல் சட்டங்களில் முக்கியமானவை
- ஒரு நபர் ஏதேனும் ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டால் உடனடியாக அவருக்கு தெரிந்தவர்களுக்கு தனது நிலையை தெரிவிக்க புதிய சட்டங்களில் வழிவகை உண்டு.
- புதிய குற்றவியல் சட்டங்கள் மூலம், புகார் கொடுத்தவர்கள் மற்றும் புகாரால் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையிடம் இருந்து முதல் தகவல் அறிக்கையின் நகலை பெற்றுக்கொள்ள முடியும்.
- பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி கிடைக்கும் வகையில், அந்தந்த எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் மட்டுமின்றி எந்த ஒரு காவல் நிலையத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் புகார் அளிக்க முடியும்.
- மேலும், காவல் நிலையங்களுக்கு செல்லாமல் வீட்டில் இருந்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
- கொடூரமான, மிகப்பெரிய குற்ற வழக்குகளில் சாட்சியங்கள் கலைக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய குற்றச் சம்பவம் நடந்த இடத்தை காவல்துறையினர் வீடியோ பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
- பெண்கள், குழந்தைகள் தொடர்பான முக்கிய வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களிடம் இனி பெண் மாஜிஸ்திரேட்டுகள்தான் வாக்குமூலம் பெற முடியும்.
- 18 வயது நிரம்பாத சிறுமியரை கூட்டு பலாத்காரம் செய்தால், அவர்களுக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும்.
- ஆன்லைனில் புகார் பதிவு செய்தல் மற்றும் ஆன்லைன் மூலம் சம்மன் அனுப்புதல் என அனைத்து நடைமுறைகளும் கணினிமயமாக்கப்பட்டுள்ளன.
- இந்திய தண்டனை சட்டத்தில் முன்பிருந்த 511 பிரிவுகள், 358ஆக குறைக்கப்பட்டுள்ளன.
- கிரிமினல் வழக்குகளில் விரைவாக நீதி வழங்குவதை உறுதி செய்ய, விசாரணை முடிந்த 45 நாட்களுக்குள் தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- நீதிமன்றத்தில் முதல் விசாரணை முடிந்த 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.
- எப்.ஐ.ஆர்., போலீஸ் ரிப்போர்ட், குற்றப்பத்திரிகை, வாக்குமூலங்கள் உள்ளிட்ட ஆவணங்கள், 14 நாட்களுக்குள் இரு தரப்புக்கும் அளிக்கப்பட வேண்டும்.
- நீதிமன்றங்கள் அதிகபட்சமாக இரண்டு முறை மட்டுமே வழக்கு விசாரணையை ஒத்திவைக்க வேண்டும்.
- பாலினம் பற்றி குறிப்பிடுகையில், மூன்றாம் பாலினத்தவர்களும் இனி சேர்த்துக் கொள்ளப்படுவர்.
- சிறுமிகள் பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு மரண தண்டனை கிடைக்க புதிய சட்டங்கள் வழிவகை செய்கின்றன.
- பயங்கரவாத குற்றங்கள் இனி ராஜ துரோகம் என்பதற்கு பதிலாக தேசத் துரோகம் என வரையறுக்கப்படும்
புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் வழக்கறிஞர்கள் இன்று (ஜூலை 1) போராட்டம் நடத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
உபரி ஆசிரியர்களை பணிநிரவல் செய்ய பள்ளிக்கல்வித் துறையின் புதிய உத்தரவு!
இட ஒதுக்கீடு சட்டம்: நிதிஷ்குமார் கோரிக்கை.. மோடி மௌனம் – காங்கிரஸ் கேள்வி!